இராமேஸ்வரத்துக்கு கப்பல்: டக்ளசும் புறப்பட்டார்!


தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் ஒருநாள் அமைச்சரான டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இந்திய நுழைவுக்கட்டணம் (விசா) இன்றி இலவசமாகப் பயணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு, ஐயப்ப யாத்திரைக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளாராம்.

பௌத்த மக்கள் புத்தகயாவுக்கு புனித யாத்திரைப் பயணமாக செல்வதைப் போன்று, இஸ்லாமியர்கள் புனித மக்கா நகருக்குச் செல்வதைப் போன்று, சபரி மலைக்கு புனித யாத்திரை சென்று வருவதற்கு அங்கிகாரமும், இலகுவான வழிமுறைகளும் ஏற்படுத்தித் தருவதற்கு உதவி செய்யவேண்டும் என்றும் அந்தக் குழுவினர் கோரியுள்ளனர்.

ஐயப்ப யாத்திரைக் குழுவினர் விடுத்த கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதாகவும், இந்திய நுழைவுக்கான (விசா) கட்டணம் அறவிடப்படாது இலவசமாக நுழைவு அனுமதி பெற்றுத்தரப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்குமிடையே கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கப்பல் சேவை நிரந்தரமாக முன்னெடுக்கப்படும்போது, இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருக்கும்  ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை மக்கள் தமது உடமைகளுடன், பொதிகள் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுக்காமல் இலகுவாக தாயகம் திரும்புவதற்குமான வாய்ப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளாராம்.

ஏற்கனவே மறவன்புலோ சச்சிதானந்தன் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட போதும் இலங்கை அரசு அதற்கு அனுமதித்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments