தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் நான்கு கட்டமாக விடுவிக்கப்படும் ??


தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர விகாராதிபதியின் தங்குமிடம் உள்ளிட்ட பிற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு நான்கு கட்டங்களாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு மாவட்ட செயலர் ம.பிரதீபன் உறுதி அளித்துள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களுக்கும் மாவட்ட செயலருக்கு இடையில் இன்றைய தினம் புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. 

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், 

மாவட்ட செயலருடனான சந்திப்பின் போது, எமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு யோசனைகள் முன் வைக்கப்பட்டன. 

அதன் போது, விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் மேற்கு பக்கமாக உள்ள காணிகளை முதல் கட்டமாக விடுவிப்பதாகவும் , ஏனைய காணிகளில் உள்ள விகாரதிபதியின் வாழிடம் உள்ளிட்ட விகாரை தவிர்ந்த ஏனைய கட்டுமானங்களை அகற்றி அந்த காணிகளையும் உரிமையாளர்களிடம் கையளிக்க இணக்கம் காணப்பட்டது. அதற்காக காணி விடுவிப்பானது 4 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது 

விகாரை உள்ள காணி மூன்று தரப்பினருக்கு சொந்தமானதாக காணப்படுகிறது. அவர்களுக்கான தீர்வு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. மாற்று காணி வழங்குவதா அல்லது நஷ்ட ஈடு வழங்குவதா போன்ற எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. 

இந்த சந்திப்பில் எமக்கு உறுதி மொழிகள் வழங்கப்பட்டனவே தவிர தீர்வுகளாக எமது காணிகளை எம்மிடம் ஒப்படைக்காததால் , நாம் திட்டமிட்டவாறு 3ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தனர். 

No comments