டக்ளஸிற்கு புதிய வழக்குகள்!



கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க ஏதுவாக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய முற்பட்டுள்ளது.

முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலக கும்பலிற்கு விற்பனை செய்த விடயத்தில் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அவரை முன்னதாக பிணையில் விடுவிக்க அரசு உயர்மட்டத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுகளில் கைவிரிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் உள்ளே வைத்திருக்கும் வகையில் கடந்த கால மோசடிகள் தொடர்பில் வழக்குகளை தாக்கல் செய்ய அரச தரப்பு முற்பட்டுள்ளது.

அவ்வகையில் யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிலும் கிளிநொச்சியின் பூநகரியிலும் கடலட்டை பண்ணைகளிற்கு நிலங்களை ஓதுக்கியதில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி மோசடிகள் தொடர்பிலான கோவைகள் தூசு தட்டப்பட்டுவருகின்றது. அரசிற்கு சேர வேண்டிய நில வாடகைகள் ஏதும் செலுத்தப்படாது சுமார் நாலாயிரம் ஏக்கர் வரையிலான நிலம் அமைச்சரின் பணிப்பில் அவரது ஆதரவாளர்களிற்கு வடமாகாண காணித்திணைக்கள அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

முறையற்ற அரச காணிகள் ஆக்கிரமிப்பு தொடர்பில் கண்டுகொள்ளாதிருந்ததுடன் மாதாந்தம் சுமார் நூறு மில்லியன் வரையிலான நிதி துஸ்பிரயோகத்திற்கு வழிகோலியதாக காணித்திணைக்கள அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே தென்னிலங்கையில் கைதான முன்னாள் அரசியல்வாதிகள் மீது அத்தகைய குற்றச்சாட்டுக்களை வைத்திருந்த அரசு தற்போது அதே பாணியில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது விசுவாச அதிகாரிகளை வேட்டையாடத்தொடங்கியுள்ளது.


No comments