ஜோக்கராக வெளியேறிய மகிந்த


1970ஆம் ஆண்டில், இளம் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்த மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்றைய தினம் (நேற்று 14), ஒரு ஜோக்கராக வெளியேறினாரென்று, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தின் கௌரவத்தைக் காப்பதற்கு, சபாநாயகர் பெரும் பாடுபட்டார் என்றும் மைத்திரி - மஹிந்த தரப்பில், மனசாட்சியுள்ள எம்.பிக்களும், தம்மோடு இணைந்து கொண்டதாகக் கூறியதோடு, தாம், இரண்டு சந்தர்ப்பங்களில், அரச பயங்கரவாத்தை எதிர்கொண்டதாகவும் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அதற்கெதிராகத் தாங்கள் அணிதிரள்வதாகவும் கூறினார்.

கட்சிகள் மாத்திரமன்றி, பொதுமக்களும், அரச பயங்கரவாதத்துக்கு இலக்காகாதிருக்க வேண்டுமென்றும் அதனால் தான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் புதிய அமைச்சரவைக்கும் எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்ததாகவும் கூறிய திசாநாயக்க, நாடாளுமன்றத்தால், எந்தவொரு சட்டத்தையும் இடைநிறுத்திவிட்டு, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்றும் கூறினார்.

ராஜபக்‌ஷ - மைத்திரிக்குப் பெரும்பான்மை இருந்திருந்தால், நிலையியற் கட்டளை நிறைவேற்றப்படுவதற்கு எதிராகவோ அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான விவாதத்தை நடத்தவோ நடவடிக்கை எடுத்திருக்கலாமென்றும் சுட்டிக்காட்டிய அநுரகுமார எம்.பி, சதிகாரர்கள், எப்போதுமே சபை நடவடிக்கைகளைக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள் என்றும் கூறினார்.

சபை அமர்வின் போது, மஹிந்த ராஜபக்‌ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும், பொறுமையுடன் நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு இருந்திருந்தால், மைத்திரிபால சிறிசேன என்பவர் தொடர்பான விடயங்களை அறிந்துகொண்டிருக்க முடியுமெனக் கூறிய ஜே.வி.பியின் தலைவர், மஹிந்த ராஜபக்‌ஷ, சதிகாரர்களின் வலையில் சிக்குண்டார் என்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், மஹிந்தவை மைத்திரி, பலிகொடுத்து விட்டாரென்று மேலும் கூறினார்.

No comments