பிரித்தானியாவில் நடைபெற்ற திலீபன் மற்றும் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல்

தியாக தீபம் திலிபனின் 31 ம் ஆண்டு, மற்றும்  கேணல் சங்கரின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானிய வெளிமாவட்டத்தில்  Bradwell Community Education Centre, Riceyman Rd,  Stoke on Trent , ST5 8LF என்னும் இடத்தில் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. நேற்று (30/09/2018) இடம்பெற்ற நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் வசந்தன் ஏற்றிவைத்தார். அதைத்தொடர்ந்து நிகழ்வின் ஈகைச்சுடரினை ஆனந்தபுரம் இறுதிச்சமரிலே வீரகாவியமான மேஜர் ஆதவன் என்று அழைக்கப்படும் சந்திரன் ஜெயந்திரனின் சகோதரன் சந்திரன் ஜெகன் ஏற்றிவைத்தார். அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஆனையிறவு சமரில் வீரகாவியமான வீரவேங்கை வேதா அவர்களின் சகோதரி கலா வசந்தன் மலர் மாலை அணிவித்தார். கேணல் சங்கரின் திருவுருவப் படத்திற்கு 1987 வல்லைவெளிச் சமரில் வீரகாவியமான வீரவேங்கை விடுதலையின் சகோதரியும் நாட்டுப்பற்றாளர் ஜோன்பொஸ்கோ அவர்களின் மகளுமான திருமதி மேரிமார்கிறற் ஜோன்சன்  மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து கூடியிருந்த மக்கள் தீபாஞ்சலி மலரஞ்சலி செலுத்தியதைத் தொடந்து எழுச்சிக்கலை நிகழ்வுகள்  ஆரம்பமானது. Stoke on Trent தமிழாழய மாணவர்கள், நடன ஆசிரியை தர்ஷிகா இராஐசேகரம் அவர்களின் நெறியாழ்கையில் தத்ரூபமாக  வழங்கிய நாட்டிய நடனங்களுடன் றொஷானியா மகேந்திரன், தர்ஷிகா வசந்தன்  ஆகியோரின் எழுச்சி நடனத்துடன் மிதுஷா நந்தகுமாரின் தனிநடனமும் சிறப்பாக இருந்தது. மதுஷன் நந்தகுமார், மிதுஷா நந்தகுமார்,  திருமதி ஜறின் சிறிமனோகரன், செல்வன் பிரஜித் நவநீதன் ஆகியோரின் தாயக எழுச்சிப் பாடல்களுடன் சிறுவன் சுதர்சன் கபிலன், செல்வி  சுரேகா கணேசன், செல்வி தர்ஷிகா வசந்தன், திருமதி றஜினா நவநீதன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றன. திரு  அற்புதன் வழங்கிய தமிழர் வரலாறு  உரையுடன் தமிழர்  ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரு நியூட்டன் வழங்கிய சிறப்புரையும் இடம்பெற்றது. தமிழீழத் தேசியக்கொடி கையேந்தலுடன் உறுதிமொழியெடுத்து எம் தாரகவரிகளுடன் நிகழ்வுகள் நிறைவு செய்யப்பட்டது.

இந்த வணக்க நிகழ்வில் நடாத்தப்பட்ட சிற்றுண்டிச்சாலையிலிருந்து கிடைத்த £450 பவுன்ட்சையும் தளிர்கள் தாயக நலன்பேணும் அமைப்பினூடாக தாயகத்தில் வாழ்வாதார உதவி வேண்டியவர்களுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments