ஈபிஆர்எல்எவ், புளொட்டை தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நீக்குங்கள் - முன்னணி கடிதம்



சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தலைமையாகக் கொண்ட ஈபிஆர்எல்எவ் மற்றும் சித்தார்த்தனைத் தலைமையாகக் கொண்ட புளொட் ஆகிய கட்சிகளை தமிழ் மக்கள் போரவையிலிருந்து நீக்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் வைத்தியகலாநிதி எஸ்.லக்ஸ்மன் ஆகியோருக்கு எழுத்துமூலமான கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுவிட்டு நாடுதிரும்பிய அவர் இன்று (30) யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார், அதன்போது ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் இயக்கங்களின் கொள்கை உறுதியற்ற நிலைப்பாடுகள் தொடர்பில் நீண்ட விளக்கமளித்த அவர் குறித்த இரு கட்சிகளையும் வைத்துக்கொண்டு உறுதியான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழ் மக்கள் பேரவை பயணிக்க முடியாது எனவும் குறித்த இரு கட்சிகளுக்கும் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களை அவர்கள் தவறவிட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,
ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் அமைப்புக்களை 2009 இற்கு முன் வேறு பெயர்கள் கொண்டு அழைத்தார்கள். ஏன் அவர்களுக்கு 2009 இற்குப் பின்னும் பல்வேறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டபோதும் அவர்கள் அவற்றைத் தவறவிட்டார்கள். 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது அதில் அவர்களை இணைத்து அவர்கள் திருந்திட தமிழ் மக்கள் பேரவை அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியது.

ஆனால் அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுவிட்டார்கள். தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்டத்தில் பங்களிப்புச் செய்யாத புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அதெற்கென உருவாக்கப்பட்ட ஆறு குழுக்களில் ஒரு குழுவின் தலைவராக இருந்தார். அவர்களால் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையினையே வெளியிட முடிந்தது.

ஈபிஆர்எல்எவ் அமைப்போ கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உதயசூரியனுடன் இணைந்து போட்டியிட்டது. அது தப்பான வழிமுறை என அவர்களுக்குப் படிப்பித்துக் கூறினோம். அவர்கள் கேட்கவில்லை. தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் உதயசூரியனின் தலைவர் ஆனந்தசங்கரி முதல் ஆளாகச் சென்று மகிந்த ராஜபக்சவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த ஆணையைப் பெறுவதற்குத்தானா சுரேஸ் பிரேமச்சந்தின் ஆனந்தசங்கரியுடன் இணைந்து உதயசூரியனுக்கு வாக்களிக்கக்கூறினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கூட மகிந்த அணியுடன் இணைந்து வவுனியாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஈபிஆர்எல்எவ் முயன்றிருந்தது. ரணில் விக்கிரமசிங்க ஊழல்வாதி என அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தபோது ஈபிஆர்எல்எவ் இன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இவ்வாறு கொள்கையில் உறுதியான நிலைப்பாடு அற்ற தரப்புக்களை இணைத்துவைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேரவையை முன்னகர்த்திக் கொண்டு செல்ல முடியாது. முதலமைச்சருடன் கூட்டணி அமைக்கும்போது அவர்களை ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

No comments