ஓட்டுண்ணியாக இருப்பதே மேல்:டெலோ தீர்மானம்!

கடந்த மாதம் 29 – 30 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 10ஆவது தேசிய மாநாடு உள்வீட்டு குழப்பங்பளால் திணறியிருந்தது.
தமிழரசுடன் ஒட்டியிருக்க ஒருபகுதியினர் முற்பட இன்னொரு தரப்பு சுயாதீனமாக இயங்க கோரியிருந்தது.
இந்நிலையில்
1.இலங்கைத் தீவின் தேசியக் கேள்வியாகவுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் அளிக்கப்பட்டுவரும் ஆதரவினை முடிவுறுத்த வேண்டும்.

2.தமிழினத்தின் தாயகத்தில் யுத்தம் முடிவுறுத்தப்பட்டு 9 ஆண்டுகள் கடந்து விட்டபோதிலும் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அரச படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மீண்டும் பிரகடனப்படுத்தி, படைக்குறைப்பு என்பது திட்டவட்டமானதும் நீதியானதுமான காலவரையறைக்குள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு, 1981ஆம் ஆண்டிலிருந்த நிலைக்கு படைகளின் பிரசன்னத்தை மட்டுப்படுத்த வேண்டும்.

3.வடகிழக்கில் அரச படைகள் தொடர்ந்து பாரிய எண்ணிக்கையில் ஆக்கிரமிப்புப் படைகளாக நிலைகொண்டிருப்பதையும் பாதுகாப்புப் படையினருக்கான செலவீனம் என்பது தமிழ், முஸ்லிம் மக்களை மாத்திரமல்லாமல், சிங்கள மக்களையும் பாதிக்கும் வகையில் தேசிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு, எதிர்வரும் வரவு, செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கக்கூடாது எனவும் இம் மாநாடு கோருகின்றது.

4.தமிழ் அரசியல் கைதிகள் 107 பேர் பலவருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, முற்றாக நீதிக்கு விரோதமானது என்பதை சுட்டிக்காட்டுவதோடு, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 12000க்கும் மேற்பட்ட தமிழ் கைதிகளுக்கு மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ததைச் சுட்டிக்காட்டி, இதே சூழ்நிலையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பல்வேறு சாட்டுக்களைத் தெரிவித்து மனிதாபிமானமின்றி இப் பிரச்சினைகளைக் கையாள்வதைக் கண்டிப்பதோடு காலதாமதமின்றி எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்த மாநாடு அரசாங்கத்தைக் கோருகின்றது.

5.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நின்று செயற்பட்டுவரும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றுபட்டு ஒரே அணியாக செயற்படுவதன் மூலமே, ஒன்றுபட்ட தமிழ்த் தேசிய அரசியற் பலத்தின் ஊடாக எம் இனத்தின் குறிக்கோளான அரசியல் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியும் என்பதை வலியுறுத்தியும், இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை, இலங்கையின் அரசியல் - நிர்வாக ஒற்றுமை என்ற கட்டமைப்புக்குள் உருவாக்க உறுதியானதும் இறுதியானதுமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாய தேவைகளை கருத்திற் கொண்டு, அத்தகைய அரசியல் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒரே அணியாக திரள முன்வருமாறும் தமிழ் தேசியத்தினை முன்னிறுத்தி நிற்கும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களையும் இந்த மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

மேலும், நியாயமானதும் யதார்த்தபூர்வமானதுமான காலவரையறைக்குள் இலங்கையின் அரசியல் தீர்வாக ஒருமைப்பாட்டிற்குள் அரசியல் தீர்வினை வென்றெடுக்க சாத்தியமில்லாதவிடத்து, எமது பிரச்சினையை உலக அரங்கின் முன் சமர்ப்பித்து தமிழ் இனம் ஓர் தனித்; தேசிய இனம் என்ற அடிப்படையில் எம்மினத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்து, உலக நாடுகளின் மன்றமான ஐக்கிய நாடுகள் சபை ஊடாக ஓர் சர்வஜன வாக்கெடுப்பை, வடகிழக்கு மாகாணங்களில் வாழும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து அங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் நடத்த வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தை செயலாக்க அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் முன்வரவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

6.போர்க்குற்ற விசாரணை விடயத்தில், தமிழ் இனத்தின் தரப்பில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கோ சமரசத்திற்கோ இடமில்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்து, இந்த தேசிய மாநாடு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளையும் பொறுப்புக்களையும் காலம் கடத்தாமல் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம் வலியுறுத்தி உறுதிப்படுத்த வேண்டும் என்றும்,

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசு தனது கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறுமிடத்து, ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கோருகின்றதென தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டிருந்து.

No comments