இயக்கச்சியை அடைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி


சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை அரசு எடுக்க வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி இன்று இயக்கச்சியை அடைந்துள்ளது.

குறித்த நடைபவனியில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர்வரையில் தற்போது இணைந்திருப்பதாகக்குறிப்பிட்டுள்ள  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமேனன் தற்போது தாம் இயக்கச்சியை சென்றடைந்துள்ளதாகவும் இயக்கச்சியில் முதலாம் நாள் நடைபவனியை நிறுத்தி அங்கு தங்கியிருந்து  நாளை காலை 07 மணிக்கு  தமது இரண்டாம் நாள் நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொதுமக்களையும் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு அவர் தெரிவித்தார். 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகியது. மாணவர்களின் நடைபவனி கிளிநொச்சி – வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.

இதேவேளை மாணர்களின் நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாணவர்களுடன் இணைந்து நடைபவனியில் ஈடுபட்டுள்ளது. எனினும் இதுவரை வேறு தமிழ் அரசியல் கட்சிகள் எதுவும் மாணவர்களின் நடைபவனியில் இணைந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

No comments