நாலக டி சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கும் உத்தரவைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மற்றும் முன்னாள் அதிபர், அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பாக, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் இருவரையும் இன்று கோட்டே நீதிமன்றத்தில் முன்னிலையாகும் படி, அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணைகளின் போது, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கக் கோரி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர்.

அதேவேளை, படுகொலைச் சதித் திட்டம் தொடர்பாக நாமல் குமார வெளியிட்ட ஒலிப்பதிவில், இருக்கும் குரல், பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவினுடையது தான் என்று அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் குரல் சோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments