மீசாலையில் ஆசிரியரை அச்சுறுத்தி வீட்டில் பணம் நகை கொள்ளை


யாழ். தென்மராட்சி, மீசாலைப் பகுதிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் முகமூடிகள் அணிந்து வாள்களுடன் நுழைந்த ஆவா குழுவினர் அங்கிருந்தவர்களை அச்சுறுத்திப் பணம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மீசாலை புத்தூர் சந்தி, கமநல சேவைகள் திணைக்களத்துக்கு பின்பக்கமாகவுள்ள வீட்டிலேயே நேற்று திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது:-

கையில் வாள்களுடன் பத்துக்கும் மேற்பட்டவர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு வீட்டின் மதிலைப் பாய்ந்து உள் நுழைந்துள்ளனர். தாம் வைத்திருந்த வாள்களைக் காட்டி வீட்டின் கதவுகளைத் திறக்குமாறு ஜன்னல்கள் ஊடாக வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தினர்.

இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த கொள்ளைக் குமப்பல் அங்கிருந்தவர்களை வாள்களைக் காட்டி அச்சுறுத்தி வைத்திருந்தனர். இதனையடுத்து அங்கு பெண் ஒருவர் அணிந்திருந்த தாலிக் கொடி உட்பட 18 பவுண் நகைகளையும் ஒரு தொகைப் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றனர்.

வீட்டுக்காரர்களின் கூக்குரல் சத்தம் கேட்டு அங்கு வந்த அயலவர்களையும் கொள்ளைக் கும்பல் வாள்களைக் காட்டி அச்சுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் கும்பலான ஆவா குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் ஒரு மணி நேரத்தின் பின்னரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ். கொக்குவில் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த ஆவா குழுவின் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் (எஸ்.ரி.எவ்.) நேற்றிலிருந்து பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments