அமைச்சரவை பதவியேற்பு உடனடியாக இல்லை


சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நியமனம், உடனடியாக இடம்பெறாது என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார். எனினும், அமைச்சர்கள் எவரும் இன்று பதவியேற்கவில்லை.

பதவியேற்பு நிகழ்வு முடிந்த கையுடன், சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடி விட்டு, ஹிணுப்பிட்டிய கங்காராமய விகாரைக்குச் சென்று மகிந்த ராஜபக்ச வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர், அவர் விஜேராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பியிருக்கிறார். இந்நிலையில்  உடனடியாக அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஏதும் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக, புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறாது என்று மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான சகாக்களில் ஒருவரான, மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில், புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் நியமனம், அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியானதா என்ற சந்தேகங்கள் நிலவி வரும் சூழலில், உடனடியாக அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய பிரதமராகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்சவுடன் நேற்றிரவு 10 மணியளவில் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதேவேளை, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கீச்சகப் பதிவு ஒன்றில், ‘என்ன ஜனநாயகம் இது திருவாளர் சிறிசேன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments