மைத்திரி, மகிந்த மீண்டும் சந்திப்பு ?


சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், மீண்டும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும், கடந்தவாரம் பத்தரமுல்லவில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவின் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினர்.

இதன்போது, பரந்துபட்ட, கூட்டணி மேற்பார்வை அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது. இந்தப் பேச்சுக்களில், பசில் ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்தப் பேச்சுக்கள் வெற்றியளித்தால், மேற்பார்வை அரசின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படுவார்.

அடுத்த சுற்றுப் பேச்சுக்கள், இரண்டு வாரங்களின் பின்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை சீஷெல்ஸ் நாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக செல்லும் சிறிலங்கா ஜனாதிபதி, அங்கிருந்து திரும்பிய பின்னர், போலந்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணங்களின் பின்னர், இரண்டு வாரங்களில், மீண்டும் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா ஜனாதிபதி சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, மேற்பார்வை அரசாங்கம் தொடர்பாக நேற்று பேருவளையில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, நாட்டை விற்றவர்களுடன், மேற்பார்வை அரசை அமைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

No comments