மக்கள் திரண்டு தீருவில் தூபியில் இரவிரவாக அஞ்சலி!


இந்திய இலங்கை கூட்டுச்சதியால் தற்கொடையான குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு போராளிகளது 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று மக்களால் தீருவில் அரங்கில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.தற்கொடையான பன்னிருபோராளிகளுள் ஒருவரது 96 வயதுடைய தாயார் பொதுச்சுடரை ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

வல்வெட்டித்துறையினை சேர்ந்த மூத்த பிரஜைகள்,பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள்,முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை பிரதித்தலைவர் சி.சதீஸ் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முன்னதாக காலை வேளை வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இணைந்து முன்னெடுக்கவிருந்த நினைவு தூபி கட்டுமானப்பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு போராளிகளது தவிர்ந்த வேறு எந்தவொரு போராட்ட அமைப்பினதும் நினைவுதூபியை அப்பகுதியில் நிறுவக்கூடாதென மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை காவல்துறையும் தூபி அமைப்பிற்கெதிராக பருத்தித்துறை நீதிமன்றில் தடையினை பெற்றிருந்தது.

இதனிடையே மாலை நடைபெற்ற நினைவேந்தலின் போதும் சிவில் உடையில் காவல்துறையினர் பிரசன்னமாகியிருந்த போதும் அதனையும் புறந்தள்ளி மக்களின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.   

No comments