கிழக்கு இணைந்தது: மாவையல்ல மாணவர்கள் சிறை வரட்டும்!


யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபயணத்தில் அவர்களோடு கைகோர்த்து அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகமும் மதியம் இணைந்து கொண்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகளை கடந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உணவுதவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உடல்நிலை மிகமோசமான கட்டத்தை அடைந்து வருகின்றது இவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கால் நடையாக அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு கைகோர்த்து அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகமும் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதனிடையே அரசியல் கைதிகளினை அனுராதபுரம் சிறையில் இன்று காலை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா சந்தித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய பாதுகாப்பு கூட்டம் நிறைவுற்றதும் 17ம் திகதி மாலை தீர்வு முன்வைக்கப்படும் என ஜனாதிபதி பதிலளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதும் சிறையில் வாடும்107 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்றைய தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டதாக சொல்லப்படுகின்றது.

இதன்போது தண்டனை தீர்க்கப்பட்ட கைதிகள் , வழக்கு இடம்பெறும் கைதிகள் ,வழக்குத் தொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என அனைவர் தொடர்பிலும் தனித்தனியாக விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு அவற்றிற்கான விடுதலை தொடர்பில் கோரப்பட்டது.அதாவது இங்கே உள்ளவர்கள் 10 ஆண்டுகள் 15 ஆண்டுகளை கடந்து 20 ஆண்டுகளாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அக் காலத்தினை அவர்களின் தண்டனைக் காலமாக கருதி அவர்களை மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு விடுவிக்க முடியாதவர்களை ஓர் ஆண்டு அல்லது இரண்டாண்டு புனர்வாழ்வு அடிப்படையில் விடுதலை செய்யுமாறும் கோரியதாகவும் மாவை தெரிவித்துள்ளார்.


இறுதியில் எதிர்வரும் 17ம் திகதி அதாவது புதன் கிழமை மாலையில் தேசிய பாதுகாப்பு கூட்டத்திற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு அதில் இரையாடி அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே மீண்டும் கூட்டமைப்பை சந்தித்து இதற்கான முடிவினை தெரிவிப்பதாக கூறியுள்ளதாக மாவை கூறியதுடன் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுறுத்த கோரியுள்ளார்.

எனினும் நடைபயணமாக வருகின்ற மாணவ பிரதிநிதிகள்,மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கையேற்கும் உறுதியுரை பெற்றே போராட்டத்தை தற்காலிகமாக கைவிடும் அறிவிப்பை அரசியல் கைதிகள் வெளிப்படுத்துவரென தெரியவருகின்றது.  

No comments