ரோஹிங்கியா அகதிகளை கடத்திய ராணுவ அதிகாரிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை!

ரோஹிங்கியா அகதிகளை கடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இரு ராணுவ அதிகாரிகளுக்கு தாய்லாந்து நீதிமன்றம் 27 ஆண்டுகள்

சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. நட்ஹசித் நக்சுவான் என்ற ராணுவ கர்னலும், கம்பனத் சங்தோங்ஜீன் என்ற கடல்படை தளபதியும் எந்த அங்கீகாரமோ பதிவோயின்றி ரோஹிங்கியா அகதிகளை கடத்த முயன்றதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கு, மே 2015ல் தாய்லாந்து-மலேசியா எல்லைப்பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைக் குழியோடு தொடர்புடையது எனக் கூறப்படுகின்றது. இப்புதைக்குழியில் கண்டெடுக்கப்பட்ட 32 உடல்கள் ஆட்கடத்தலில் சிக்கிய மக்களின் (ரோஹிங்கியா, வங்கதேசிகள்) உடல்களாக இருக்கும் என சந்தேகம் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. இதில், கடந்த ஆண்டு முன்னாள் ராணுவ ஜெனரல் மனஸ் கோங்பனுக்கு 27 ஆண்டுகளும் முன்னாள் மேயர் பஞ்சோங் என்பவருக்கு 78 ஆண்டுகளும் முன்னாள் மாகாண தலைவர் பஜ்ஜூபனுக்கு  75 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. இது தாய்லாந்தின் மிக முக்கிய ஆட்கடத்தல் வழக்காகவும் பார்க்கப்படுகின்றது.

2011 முதல் 2015 வரை தென் தாய்லாந்து கடல் பகுதியினூடாக ரோஹிங்கியாக்கள், வங்கதேசிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அகதிகள் மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சித்த பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.


No comments