திலீபன் நினைவேந்தலைத் தடுக்கும் சிறிலங்காவின் சதி - இன்று விசாரணை

தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி, யாழ். மேல் நீதிமன்றில் சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், நாளை நடத்த ஏற்பாடாகியுள்ள 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறும், திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி உள்ளிட்டவற்றை அகற்ற யாழ். மாநகர சபைக்கு உத்தரவிடுமாறும் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான், இன்று யாழ். மாநகர சபை ஆணையாளரை நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, இன்று யாழ். மாநகர சபை ஆணையாளர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

அதேவேளை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டவாளருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும், யாழ். சட்டவாளர் சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையிலான சட்டவாளர்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்களும் முன்னிலையாகவுள்ளனர்.

அதேவேளை எந்த எதிர்ப்புகள் வந்தாலும் நாளை திலீபன் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில், ஏற்பாட்டாளர்கள் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments