மீண்டும் புலிகள் கால நிர்வாக கட்டமைப்பு!


யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தப்படுத்த தவறிவிட்ட இலங்கை காவல்துறை மீண்டும் விடுதலைப்புலிகள் கால விழிப்புக்குழுக்கள் உத்தியை கடைபிடிக்க தொடங்கியுள்ளது.

அவ்வகையில் குப்பிளான் பகுதியில் அதிகரித்துள்ள திருட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடித் தீர்வு காணும் வகையிலேயே இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.

குறித்த விசேட கலந்துரையாடலில் குப்பிளானிலுள்ள இரு கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த குடும்பப் பெண்கள் உட்படப் பெருமளவான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் குப்பிளானில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள திருட்டு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது குப்பிளான் தெற்குப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள திருட்டு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் சுன்னாகம் பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்படுவது தொடர்பிலும், குற்றவாளிகளைக் கைது செய்வதில் பொலிஸாரின் அக்கறையீனம் தொடர்பிலும் கடும் விசனம் வெளியிடப்பட்டது. குறிப்பாக பொலிஸார் திருடர்களுக்குச் சார்பாகச் செயற்படுகின்றார்களா? எனவும் கேள்வியெழுப்பப்பட்டது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பட்டப்பகல் வேளையில் குப்பிளான் வடக்கு வீரபத்திரர் கோயிலுக்கு அருகாமையில் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்ட போது குப்பிளான் சந்தியிலுள்ள ஹோட்டலொன்றில் சுன்னாகம் பொலிஸார் நின்றிருந்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? எனவும் கேள்வியெழுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குப்பிளான் பகுதியில் அதிகரித்துள்ள திருட்டுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குப்பிளான் தெற்கு மற்றும் குப்பிளான் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளுக்குத் தலா-20 பேரைக் கொண்ட தனித்தனியான விழிப்புக்குழு நிர்வாகங்கள் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

குறித்த விழிப்புக்குழு நிர்வாகங்கள் இரண்டும் தத்தமது கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் தலா ஒரு உறுப்பினரை உள்வாங்கிச் சுழற்சி முறையின் அடிப்படையில் செயற்படுவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.


இரு விழிப்புக் குழுக்களிலும் தலா ஒரு பொலிஸார் தினமும் இணைந்து செயற்படுவதற்கு அனுமதியளிப்பதாகச் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி இதன் போது வாக்குறுதி வழங்கினார்.

இரவு வேளைகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்களை இடைமறித்துச் சோதனை செய்தல் மற்றும் சந்தேகத்துக்கிடமான வீடுகளைச் சோதனை செய்யும் நடவடிக்கையில் குறிப்பிட்ட பொலிஸார் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விழிப்புக்குழுவினருக்கு விசேட அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழிப்புக் குழுவினர் தமது கைகளில் கொட்டன்களுடன் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், விழிப்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விழிப்புக்குழுக்கள் இரண்டும் உடனடியாகச் செயற்பட ஆரம்பிப்பதெனவும், தினமும் இரவு-09 மணி முதல் மறுநாள் காலை-05 மணி வரை விழிப்புக்குழுக்கள் கடமையில் ஈடுபடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் தோறும் விழிப்புக் குழுக் கூட்டங்களைத் தவறாது நடாத்துவதெனவும் இதன்போது  தீர்மானிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments