திட்ட அறிக்கை தமிழக கல்வி அமைச்சரிடம்?


ஆராய்ச்சி நூலகத்திற்கான திட்ட அறிக்கையை தமிழக கல்வி அமைச்சர் கௌரவ. கே.ஏ. செங்கோட்டையன் அவர்களிடம் சமர்ப்பித்தார் வடமாகாண கல்வியமைச்சர்.

கடந்த ஜனவரி மாதம் தமிழக உயர்கல்வி அமைச்சர் கௌரவ அன்பழகன் அவர்களை சென்னையில் சந்தித்த வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிட்ட முறையில் உருவாக்கிச் செயற்படுத்தவும் நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கிலும் வடக்கு மாகாணத்திற்கு ஓர் ஆராய்ச்சி நூலகம் அமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி பிரஸ்தாபித்து அதனை அமைத்துத் தருவதற்கான உதவியைக் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கைக்குச் சாதகமாகப் பதிலளித்த அவர் இதற்கான திட்டவரைவினையும் மதிப்பீட்டினையும் தமிழக முதல்வருக்கும் தனக்கும் அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். இதற்கமைய இத்திட்ட வரைபும் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ் நூலகத்திற்கு ஐம்பதாயிரம் நூல்களை வழங்கிவைப்பதற்கும் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண பாடசாலை நூலகங்களுக்கு நூல்களை கொள்வனவு செய்வதற்காக எட்டு மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்குவதற்கும் யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ் பொதுநூலகத்தில் நடைபெற்ற வைபவரீதியான கையளிப்பு நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண கல்வியமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்கள் தமது உரையில், தமிழக உயர்கல்வி அமைச்சர் கௌரவ அன்பழகன் அவர்களுடனான தனது சந்திப்பு பற்றியும் வடக்கு மாகாணத்திற்கான ஒரு ஆராய்ச்சி நூல்நிலையத்தின் அவசியம் பற்றி வேண்டுகோள் விடுத்ததையும்; அதற்கு அவர் அளித்த சாதகமான பதிலையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இந்த விடயம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய அதற்கான திட்டவரைபும் மதிப்பீடும் கையளிப்பதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக கல்வி அமைச்சர் கௌரவ கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தனது உரையில், ஆய்வு நூலகத்தின் அவசியத்தை தான் உணர்ந்திருப்பதாகவும் இதுபற்றி தான் உரியவர்களுடன் பேசி செயற்படுத்த முழுமுயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

யாழ் பொதுநூலகத்தில் நடைபெற்ற இவ்விழாவினைத் தொடர்ந்து தமிழகக் கல்வியமைச்சர் கௌரவ செங்கோட்டையன் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரின் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வடக்கு மாகாண கல்வியமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஆய்வு நூலகம் அமைப்பதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன. இதனைப் பெற்றுக்கொண்ட தமிழக கல்வியமைச்சர் அவற்றை கௌரவ தமிழக முதல்வரிடமும் உயர்கல்வி அமைச்சரிடமும் கையளித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

தமிழக கல்வி அமைச்சரின் வருகையை கௌரவிக்கும் வகையில் வடமாகாண கல்வி அமைச்சரினால் அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

No comments