கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு செய்யப்படப்போவதில்லை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, வெறுமனே தேர்தலில் வாக்குப் பெறுவதற்கான இயந்திரமாகப் பயன்படுத்துவதையே, தமிழரசு கட்சி விரும்புவதாக,  சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு செய்யப்படும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது,  நடைபெறபோவது இல்லையெனவும் ​அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு, அதன் தலைமை மாறினால், அதில் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் களமிறங்க சந்தர்ப்பமுண்டு என தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சரது மேற்படி கருத்து தொடர்பாக சுரேஷ் பிரேமசந்திரனிடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, பதிவுசெய்யப்படமாட்டாது என்பதையே, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக தொடர்ச்சியாக கூறிவருகின்றார்களெனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சியானது கூட்டமைப்பை வெறுமனே நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் வாக்குபகளைப் பெறுவதற்கான இயந்திரமாகவே பயன்படுத்த விரும்புகின்றதே தவிர, அதனை கட்சியாக பதிவுச் செய்ய அவர்கள் தயாராக இல்லையெனத் தெரிவித்த அவர், இந்நிலையில் முதலமைச்சர் கூறுவது போன்று, அது கட்சியாக பதிவு செய்யப்படும் என எதிர்பார்ப்பது, ஒருபோதும் நடைபெறப்போவதில்லையெனவும் கூறினார்.
அவ்வாறு, கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய தமிழரசுக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதுவே நிதர்சனமாகுமென, அவர் மேலும் தெரிவித்தார்.

No comments