வண்டில் சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைது


வண்டில் சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பி சென்றுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வட மாகாணத்தில் மாட்டு வண்டி சவாரி பாரம்பரிய விளையாட்டாக பேணப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.

வண்டில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட மாடு ஒன்றினை திருட்டுத்தனமாக வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த மாட்டிலிருந்து பெறப்பட்ட இறைச்சியும், எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றுமொருவர் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு பொது மக்களின் மாடுகள் கடத்தப்படுவதும், சட்டவிரோதமான முறையில் இறைச்சிகாக வெட்டப்படுவதும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

No comments