காவல்துறை வீதி வீதியாக துண்டுபிரசுரம்:உடுப்பிட்டியில் மீண்டும் கொள்ளை!


இலங்கை காவல்துறை ஆவாக்குழுக்களையும் கொள்ளைக்கும்பல்களைப்பிடிக்க துண்டுபிரசுரங்கள் விநியோகித்து வீதி வீதியாகத்தேடி அலைந்துதிரிய உடுப்பிட்டி பகுதியில் மீண்டும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஒரு சில மாதங்களுள் குறிப்பிட்ட சிறுபகுதியினுள் நடைபெற்ற ஆறாவது கொள்ளை சம்பவம் இதுவாகும்.ஆட்களற்ற வீடுகள்,தனித்திருக்கும் வயோதிப குடும்பங்களினை இலக்கு வைத்து இக்கொள்ளைகள் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் உடுப்பிட்டியின் சந்நிதி கோவில் வீதி வாசிகசாலைக்கு அருகில் இன்று ஞாயிறு அதிகாலை ஒரு மணியளவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் வயோதிபத்தம்பதிகளை வாளால் வெட்டி படுகாயப்படுத்தியதுடன் கொள்ளையிலிமீடுபட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் பெருமளவு பணம், மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத்தெரியவருகின்றது. அதிகாலை ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை கொள்ளையர்கள் குறித்த வீட்டில் தங்கியிருந்து கொள்ளையடித்துள்ளனர். 

குறித்த தம்பதிகளது உறவினர் ஒருவருக்கு அப்பகுதியில் வீடு ஒன்று கட்டி வருவதாகவும் அதற்காக வங்கியிலிருந்து நேற்று பணம் எடுத்து வந்த பின்னரே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகிப்படுகாயமடைந்த கணவன் மனைவியென இருவரும் அவசர சிகிச்சைப்பிரிவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே உடுப்பிட்டி பகுதியில் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை உள்ளடக்கி நடைபெறும் கொள்ளைகள் தொடர்பில் உடுப்பிட்டி மக்கள் சீ;ற்றமடைந்துள்ளனர்.

வல்வெட்டித்துறை காவல்துறையினரது திறமையின்மை அல்லது அசட்டையீனம் காரணமாகவே கொள்ளைகள் அரங்கேறுகின்றனவாவென கேள்வி எழுப்பியுள்ள உடுப்பிட்டி நலன்புரி அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள்  காவல்நிலையத்தில் இல்லாத பொறுப்பதிகாரியை வைத்துக்கொண்டு எவ்வாறு சட்டமொழுங்கை பாதுகாக்க முடியுமெனவும் கேள்வி எழுப்பியுள்ளன.

ஏற்கனவே அண்மையில் வயோதிப தம்பதியொன்றின் 47 இலட்சம் பணம் கொள்ளையிடப்பட்டு ஒரு மாதம் கூட கடந்திருக்கவில்லையென அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வல்வெட்டித்துறை காவல்துறையினர் பொறுப்பற்று ஏனோ தானோவென பணியாற்றுவதாலேயே கொள்ளையர்கள் ,வாள் வெட்டுக்கும்பல்களின்  அடாவடிகளை கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்துள்ள அவ்வமைப்புக்கள் கூண்டோடு காவல்துறையினரை இடமாற்றம் செய்ய கோரிக்கையினை முன்வைக்கவுள்ளன.

No comments