மகாவலி ஆக்கிரமிப்பும் இன அழிப்பின் வடிவமே - பார்த்திபன் அறிக்கை


இன பரம்பல் திட்டமிட்டு மாற்றியமைப்பது தொடர்பான கண்டன அறிக்கை

முள்ளிவாக்காலுடன்  தமிழ்மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்ல. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது வேறு வடிவில் தொடருகின்றது. இரத்தம் இன்றி சத்தம் இன்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை என்ற அதிகாரத்தினாலும் மரவுரிமைச் சொத்துக்கள் என்ற அறிவிப்புக்கள் மூலமும் தமிழ் தேசித்தின் பாரம்பரிய நிலங்கள் விழுங்கப்படுகின்றன. பூர்விகமாக வாழ்ந்த நிலங்களில் எமது இனத்தின் இன பரம்பல் திட்டமிட்டு மாற்றியமைக்கப்படுகின்றது.

தமிழர் தாயகப் பிரதேசம் என்ற கருப்பொருளையே இல்லாமல் செய்வதற்குரிய அத்தனை செயற்பாடுகளும் மிகுந்த திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செம்மையாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் தமது உரிமைகள் வேண்டி வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடும் போது அரசுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள் அது எது வரப்போக்கும் தீர்வுத்திட்டத்தை பாதிக்கும் என்று கூறுகின்ற சில மக்கள் பிரதிநிதிகளும் இந்த இன பரம்பலை மாற்றியமைக்கும் விடயத்தில் கண்டன அறிக்கைளுடன் மட்டுப்படுத்திக் கொள்வது ஏன் என்று தெரியவில்லை? அதை தடுத்து நிறுத்துக்கின்ற வல்லமை இல்லையா அல்லது  அவர்களும் இந் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாக்கப்பட்டவர்களா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

அது எப்படியோ சிங்களப் பேரினவாதம் இன்று மகாவலி அதிகார சபையின் அதிகாரங்களைக் கொண்டு இனப்பரம்பலை மாற்றியமைக்க முயலும் சாணக்கியம் அன்றே தொடங்கி விட்டது என்பதை  அதற்கு ஒரு ஆசிரியர் செய்த ஆய்வில் இருந்து பெறப்பட்ட தகவல்கள ; நிருபித்து நிற்கின்றது. அதாவது
1970 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட J,K,L என்ற வலயங்கள் மன்னார்> கிளிநொச்சி> முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைந்துள்ளது. இதில் K வலயம் கனகராயன் குளம்>  இரணைமடுக் குளம் என்பவற்றை மையமாககக் கொண்டு உருவாக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு மகாவலித் திட்டத்தை துரித மகாவலி அபிவிருத்தி திட்டமாக மாற்றியது. இதன் போது மூலத்திட்டதிலிருந்த J,K,L என்ற வலயங்கள் நீக்கப்பட்டன.

1987 ஆம் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இவ் ஒப்பந்தத்தின் ஒரு சரத்து பின்வருமாறு கூறுகின்றது. 'அருகருகே இருக்கும் இரண்டு மாகாணங்கள் விரும்பினால் சட்டம் ஒன்றை இயற்றி இன்றிணைந்து ஒரே மாகாணமாக செயற்பட முடியும்' (இது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது வேறு விடயம்)

இதன்படி வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் அருகருகே இருப்பதனால் எதிர்காலத்தில் இவை இணைந்து விடுமோ என்ற அச்சம்  அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 1988 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தக மானியில் L வலயம் விசேட நிலப்பரப்பாக மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது. மணலாறு என்று அழைக்கப்பட்ட இப்பிரதேசம் வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது மட்டுமின்றி இப்பிரதேசம் அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்திற்கு கடல் எல்லை ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்திற்கு கடல் எல்லை ஒன்று உருவாக்கப்பட்டது . இந் நடவடிக்கை மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிலத் தொடர்பற்றதாக மாறின. பின்னர் இப் பிரதேசத்தில் சிங்கள மக்கள் தொடர்ச்சியாகக் குடியேற்றப்பட்டனர். தற்போது இப்பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு வெலிஓயா என்ற ஒரு பிரதேச செயலர் பிரிவாக இயங்குகின்றது.

2011 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகை 6949 பேர் இவர்களில் 6937 பேர் சிங்களவர்களாவர்  10 பேர் தமிழராகவும்  2 பேர் முஸ்லிங்களாகவும் காணப்பட்டனர். என்று கூறுகின்றது அந்த ஆய்வு

அந்த ஆய்வின் மூலம் கிடைத்த பட்டறவின் பிரகாரம் இன்று முல்லைத்தீவிற்கு இருக்கின்ற  இதே நிலைமை யாழ்.மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மையமாகக் கொண்டு இரணைமடுக் குளப்பிரதேசத்திற்கும் ஏற்படும். குடாநாட்டின் குடிநீர்பிரச்சைனையை தீர்ப்பதாக கூறிக்கொண்டு இப்பிரதேசத்தை உள்ளடக்கிய K வலயம் விசேட நிலப்பரப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படுகின்றது என அரசாங்கம் எதிர் காலத்தில் அறிவிக்க முடியும் .

ஆக 28.08.2018 அன்று முல்லைத்தீவில் ஆர்ப்பட்டத்தை செய்யும் நாம் விரைவில் இதுபோன்ற ஒரு ஆர்ப்பட்டத்தை கிளிநொச்சியிலும் நடாத்த வேண்டிய நிலை ஏற்படும்.
தமிழ்தேசத்திற்கான அங்கீகாரம் கிடைக்காத வரை இவ்வகையான பல்வேறு பட்ட வடிவங்களில் நில அபகரிப்புக்கள் தொடரத்தான் போகின்றன.

வரதராஜன் பார்த்திபன்
உறுப்பினர்
யாழ்.மாநகர சபை

No comments