தளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்

காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பால்ராஜ் அண்ணை அப்பொழுது தான் வெளியில் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். உடனே லக்ஸ்மன் அண்ணையைத் தனது அறைக்கு வருமாறு அழைத்தார். சிறிது நேரத்தின் பின் அவசர அவசரமாக வெளியில் வந்தவர், உடனடியாக அங்கு இருந்தவர்களை புறப்படுமாறு கூறினார். இரண்டு வாகனங்களில் புறப்பட்டோம்.

லக்ஸ்மன் அண்ணையின் வாகனத்தில் ஏறிய பால்ராஜ் அண்ணை மற்றவர்களைப் ”பின்னால் வாங்கோ” எனக் கூறிவிட்டுப் புறப்பட்டார். வாகனம் பண்டத்தரிப்புப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. எங்களுக்கு அவசரத்தின் காரணம் புரியவில்லை.
இராணுவம் நகர்ந்ததாக செய்திகள் இல்லை, அராலிப்பகுதியால் இராணுவம் முன்னெடுப்புச் செய்யத் திட்டமிட்டுக்  கொண்டிருந்தான். அதை எதிர் கொள்ளவதற்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனவே எதற்காக இந்த அவசரம் என்பதை அனுமானிப்பதற்குக் கடினமாக இருந்தது.
வாகனம் மாதகல் பகுதிக்குச் சென்று, ஓரிடத்தில் நின்றது. வாகனங்களில் இருந்து இறங்கியதும் சிறிய ஒழுங்கைக்குள்ளால் கூட்டிச் சென்றனர். எல்லோரும் சென்று கொண்டிருந்தோம். அந்த இடத்தில் ஆங்காங்கு போராளிகள் நின்றனர். அங்கிருந்த ஒரு வீட்டில் அப்போது யாழ்மாவட்டத்தளபதியாக இருந்த தினேஸ் அண்ணை (சு.ப.தமிழ்ச்செல்வன்) நின்றார். அந்த வீட்டின் பின்பக்கம் தோட்டம், தோட்டத்திற்கு அப்பால் குறுக்கு ஓழுங்கை, அதற்கு அப்பால் உள்ள பகுதிகளைப் பார்க்க முடியாமல் கிழுவைவேலி மறைத்தது. தளபதி பால்ராஜ் அண்ணை தினேஸ் அண்ணைக்கு அருகில் அமர்ந்து கதைத்தார்.
அங்கு நின்ற சில போராளிகளது உடல்களில் செம்மண் ஒட்டியிருந்தது, அவர்களின் முகங்களில் படபடப்பும் மௌனமும் தெரிந்தது. அவர்களிடம் ‘கடைசியாக எங்க கண்டனீங்கள்’ என்று வினவ ‘‘நாங்கள் பின்வாங்கி வரக்கில, கிணத்துக் கட்டோட படுத்திருந்து ஒருவர் சுட்டுக்கொண்டிருந்தவர். நாங்கள் அவரைக்கடந்து தான் வந்தனாங்கள். அவர் தான் றோமியோ நவம்பர் என்று எங்களுக்கு தெரியாது” என்றனர்.
யாழ்மாவட்டம் மற்றும் சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதியாக இருந்த, அதிகாரிகள் கல்லூரிப்பயிற்சி பொறுப்பாளர் ராஜன் அண்ணையைப் பற்றித்தான் கதைக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டபோது தூக்கி வாரிப்போட்டது. அதுவும் றோமியோ நவம்பரைத் தெரியாது என்பது சற்றுத் திகைப்படைய வைத்தாலும் அவர்கள் புலனாய்வுத்துறையின் புதிய போராளிகள் என்பதால் அவரைக் கண்டிருக்க வாய்ப்பில்லை என்பதை உணரமுடிந்தது.
சிறிது நேரம் அமைதியாக அச்சண்டையில் இருந்து தப்பி வந்தவர்களை விசாரித்த தளபதி பால்ராஜ் அண்ணை கேட்டார் ‘‘கிணத்தடிக்குக் கூட்டிக் கொண்டு செல்லமுடியுமா’ அவர்கள் ‘ஆம்’ என்று தலையாட்ட லெப்கேணல் ரவி, லெப்கேணல் கில்மன் ஆகியோருடன் வேறு போராளிகளையும் ஒழுங்குபடுத்தி ‘றோமியோ நவம்பர் இருந்த இடத்தடிக்குச் சென்று  அப்பகுதியில் வித்துடல் இருக்கின்றதா?’ எனப் பார்க்குமாறு கூறினார்.
அவர்களும் வாழைத்தோட்டத்திற்குள்ளால் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நகரத் தொடங்கினர். அப்போது அங்கு நின்ற ஒருவர்  சம்பவத்தைப்பற்றி விளங்கப்படுத்தினார். ‘நாங்கள் (புலனாய்வுத்துறை அணியினர்) அந்தப்பகுதியில் கிளியறிங் செய்து வரும் இராணுவத்தினர் மீது பதுங்கித்தாக்குதல் செய்வதற்கான வேவுபார்த்து, தாக்குதலுக்குத் தயாராகவிருந்தோம். அந்த நேரத்தில்தான் ராஜன் அண்ணை எங்களைப்பார்க்க வந்தவர். கோபி அண்ணையாட்கள் இந்தப் பதுங்கித்தாக்குதல் பற்றிய திட்டத்தைப் பற்றி அவரிடம் கூறினர்கள். ராஜண்ணையும் இது ஒன்றும் கடினமான சண்டையில்லை என்று கூறினார். தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாகச் செய்து முடிக்கப்பட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வெளியில் யாருக்கும் தாக்குதலைப்பற்றித் தெரியாது. இரவு அணிகள் நிலையெடுத்துத் தயாராகின. மறுநாட்காலை கிளைமோர் வெடிச்சத்தத்துடன் சண்டை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் பக்கவாட்டால் வந்த இராணுவம்  தாக்குதலைத் தொடுத்தது. இதனால், சண்டை ஆமிக்குச் சாதகமாக மாறிவிட்டது, கோபியும் தலையில் காயப்பட்டுத் தொடர்பற்றுப்போக, சண்டையின் தலைமையை நேரடியாகப் பொறுப்பெடுக்கவேண்டிய நிலையில், தனது கோல்ட் கொமாண்டோ ஆயுதத்தை ஒருவரிடம் கொடுத்து விட்டு ஏ.கே ரகத்துப்பாக்கியைக் வாங்கிக் கொண்டு சண்டைப்பகுதிக்குள் தனித்துச் சென்றார். அணிகளைப் பின்னுக்கு எடுப்பதற்காகக் கிணற்றுக்கட்டைக் காப்பாகப்பயன்படுத்தி தனியே சண்டையிட்டார்’ எனத் தனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னார்.
சண்டை நடந்த இடத்தில் நிலவரங்களை அறிய வாழைத்தோட்டத்திற்குள்ளால் சென்றவர்களின் தகவலுக்காக எல்லோரும் காத்திருந்தனர். அவர்கள் திரும்பி வந்தனர். வரும்போது ராஜன் அண்ணையின் நோட்புக்கை எடுத்து வந்தனர். அவர்கள் ‘கிணற்றுக்கட்டிலிருந்து சண்டையிட்டிருக்கின்றார். பக்கவாட்டால் வந்த ஆமி அவரை கிணற்றடியில் வைத்து சுட்டிருக்கின்றான். அவர் சண்டையிட்ட இடத்து மண்ணில் இரத்தம் சிந்தியிருக்கின்றது. இழுத்துக் கொண்டு போன தடயம் இருக்கின்றது. தடையத்தை பின்தொடர்ந்து போனம் தடையம் அப்படியே இராணுவக்காவலரண் பக்கமாகச் செல்கின்றது எனச் சொன்னார்கள்.
வீரச்சாவும், அவரது உடலை இராணுவம் எடுத்துச் சென்று விட்டான் என்பதும் ஓரளவு உறுதிசெய்யப்பட்ட நிலையில் ‘இனிப் போவம்’ என தினேஸ் அண்ணை சொல்ல, பால்ராஜ் அண்ணை திருப்தியற்ற நிலையில் அங்கிருந்து வெளிக்கிட்டார். பின்னுக்கு வந்த அவர் தளபதி தினேஸ் அண்ணையிடம் ‘நீங்கள் போங்கோ நான் சண்டையில் பங்குபற்றின போராளிகளுடன் கதைத்துவிட்டு வருகின்றேன்’ எனச் சொல்லி விட்டுப் போய்விட்டார்.
சற்று நேரம் மீண்டும் அப்போராளிகளுடன் கதைத்துவிட்டு ‘நான் றோமியோ நவம்பர் வீரச்சாவடைந்த இடத்தைப் பார்க்கவேண்டும், போவம்’ என்றார். மீண்டும் அந்த வீட்டடிக்கு வந்து வாழைத்தோட்டத்திற்குள்ளால் தவண்டு கிணற்றடிக்குச் சென்றோம். அங்கு சென்று றோமியோ நவம்பர் சண்டையிட்ட இடம், எந்தப்பக்கத்தால் இராணுவம் இழுத்துக் கொண்டு சென்றான் என்பதையெல்லாம் பார்த்து விட்டு, என்ன பிரயாசையோ தெரியவில்லை. மீண்டும் அந்தப்பகுதிக்குள் ஒவ்வொரு திசைக்கும் ஆட்களை அனுப்பி எங்காவது உடல் இருக்க வாய்ப்பிருக்கிறதா? என மீண்டும் தேடச் சொன்னார் தளபதி பால்ராஜ் அண்ணை.
சாள்ஸ் அன்ரனி படையணியின் உருவாக்கத்தில் வலுவான பங்களிப்பைச் செய்த ஒரு தளபதி, அவரின் உடல் கிடைத்துவிடாதா! என்ற ஏக்கம் பால்ராஜ் அண்ணையிடம் வெளிப்பட்டது. ஒவ்வொரு பக்கமும் சென்றவர்கள் வரும்போது இரகசியமான குரலில் ‘என்னமாதிரி என்னமாதிரி’ என எதிர்பார்ப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார். இறுதியாக அவர் இரத்தப்படிவு இருந்த இடத்தில் கையை வைத்து சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டுத் திரும்பினார்.
சாள்ஸ் அன்ரனி படையணி 1991 உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் தான் இருவரும் முதன் முதலில் இணைந்து பணியாற்றினர்கள். அந்தக் குறுகிய காலத்திற்குள்  பால்ராஜ் அண்ணைக்கும் அவருக்குமிடையிலான அந்த நெருக்கமான நட்பு ஏற்பட்டது. ராஜண்ணையின் அற்புதமான, அர்ப்பணிப்பான, அன்பான, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணவியல்பு இலகுவில் யாரையும் கவர்ந்திழுக்கும் தன்மை வாய்ந்தது.
அதனாலேயே எல்லா மாவட்டங்களிலும் இருந்து வந்த போராளிகளின் மனங்களை வென்று ஆளுமை செலுத்தி, சாள்ஸ் அன்ரனி படையணியின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றினார்.
சாள்ஸ் அன்ரனி படையணி  சந்தித்த முதற்சமரான  ‘வன்னி விக்கிரம’ முதல்நாள் எதிர்ச்சமரைத் தலைமை தாங்கி இராணுவத்திற்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தினார். ஒரு உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது. சிறிது இடைவெளியின் பின்னர்  வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி நகர்ந்த இராணுவத்துடனான கடுமையான மோதலில் கையில்  காயமடைந்தார்.
பின்னர் ஆ.க.வே சண்டையில் பிரதான பங்காற்றிய ராஜண்ணையைப்பற்றி மூத்ததளபதி பொட்டம்மான் பதிவு செய்ததாவது ‘‘ஆனையிறவுப் பெரும் போர்க்களம், ஓய்வின்றிப் பம்பரமாய் ராஜன், சென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையற் கொட்டிலில், சந்தியில் இருந்த  மெடிக்ஸ் வீட்டில், எங்கும் நின்றான்- எல்லா நேரமும் நின்றான். கட்டைக்காட்டில் ஆமியின் கவசவாகனம் நகர்ந்தாலும் ஆர்.பி.ஜிக்கு றோமியோ நவம்பர். புல்லாவளியில் ஆட்லறி செல் விழுந்து இரண்டு பெர் செத்து ஐந்து பேர் காயம் என்றால், மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர். மெடிக்ஸ் வானை போகவிடாமல் மேலே கெலி நின்றால் கலிபர் அனுப்பவும் றோமியோ நவம்பர். குணாவின் குறூப்புக்கு அனுப்பிய சாக்குகளுக்குச் சாக்கு ஊசி வேண்டும் என்றால், றோமியோ நவம்பர். வீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும் வேளையில், தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்த்து எதிரியைத் தடுக்கும் வேலைக்கும் றோமியோ நவம்பர். எல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப்பாரத்தையும் தானாய்ச் சுமந்தான். எப்படிப்பட்டவனை நாம் இழந்து விட்டோம்”
ராஜன் அண்ணை ஒரு இறுக்கமான தளபதியாகத் தெரிந்தாலும் போராளிகள் அவருடன் நட்பாகவே பழகுவார்கள். ஒரு தடவை அணிகளுக்கான பொருட்களை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு அணித்தலைவர் தனக்கு ‘இன்னும் எத்தனை தருவீர்கள்’ எனக்கேட்க  அதற்கு ‘ஐந்து’ எனக்கூறினார். சத்தத்தில் அவரும் விளங்காமல் திருப்பிக்கேட்க , அவர் கையைத்தூக்கி ஐந்து எனக் காட்ட அந்தப்போராளி ‘என்ன அண்ணை ஐந்து என்றுவிட்டு மூன்றைக் காட்டுகின்றீர்கள்’ எனக் கேட்டான். சிரித்து விட்டு, மறுகையால் ஐந்தைக்காட்டினார். ஏனெனில் அவரது ஒரு கையில் இரண்டு விரல்கள் இல்லை.  இதனாலேயே அந்தப்போராளியும் அதை நகைச்சுவையாக அப்படிக் கேட்டார்’.
பின்னர் ராஜன் அண்ணை, தலைவரின் பெரும் கனவில் உருவான அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரிக்கு பொறுப்பாக நியமிக்கப்படுகின்றார். எல்லாமாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட போராளிகளை பன்முக ஆற்றலுள்ள தளபதிகளாக வளர்த்தெடுக்கும் பணியினைச்  செய்தார். இந்தப்பணியைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் தான் மாதகலில் நடைபெற்ற பதுங்கித்தாக்குதல் சம்பவத்தில்   வீரச்சாவடைய நேரிட்டது.
1992 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி, அவரது வீரச்சாவுடன் நிறுத்தப்பட்டது. பின்னர்  புதிய  அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி 1994 ம் ஆண்டே பிரிகேடியர் பானு தலைமையில் மீள ஆரம்பிக்கப்பட்டது. ராஜண்ணையின் இழப்பின் பின் இரண்டு வருடங்கள் எடுத்தது  அதற்குப்  பொருத்தமான  ஒரு  பொறுப்பாளரைத் தெரிவு செய்ய என்பதில்  இருந்து  ராஜன்  அண்ணையின்  ஆற்றலை புரிந்து கொள்ளலாம்.
அத்தகைய  சிறந்த தளபதியை இழந்து 21 வருடங்கள் ஆகின்றன.  ஈழவிடுதலைப்போராட்டத்தில் அர்ப்பணிப்பான, ஆற்றலுள்ள, ஆளுமைமிக்க தளபதிகளில் லெப்கேணல் ராஜன் அவர்களுக்கான தனியிடம் நினைவு கொள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
27.08.1992  அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில்

மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர்
லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)
(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்)

கப்டன் கணேசன் (கணேஸ்) 
(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)

கப்டன் வன்னியன் 
(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)
(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்) 
(சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா) 
(பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி,  யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்) 
(இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மதியழகன் 
(நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை,  யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அறிவழகன்
(நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான்,  யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

No comments