இனப்பரம்பலின் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் ஜனநாயக விரோதச் செயல்


மகவலி அபிவிருத்தி வயலத்திட்டம் இனப்பரம்பலின் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் ஐனநாயக விரோத  நடவடிக்கை எனச் சாடியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எமக்கு கிடைக்க வேண்டிய பங்கைத்தராது மேலும் தமிழ்ப் பகுதிகளில் நூறு வீதம் சிங்கள மக்களுக்கு காணிகளை வழங்குவதையும் தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,


இலங்கையில், தங்களுடைய பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை இன மக்களால் கபளீகரம் செய்யப்படுவதனை எமது தமிழ் மக்கள் அச்சத்துடனேயே நோக்கி வந்துள்ளார்கள். தமது இருப்பைத் தொடர்ந்தும் தக்க வைக்க முடியுமா என்ற அச்சம் தமிழ் மக்கள் மனதிலே ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ளது. கல்ஓயா திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இனப்பரம்பல் மாற்றியமையக்கப்பட்டமை முதலில் அச்சத்தை உதயமாக்கியது. அதன் பின் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் தற்போது வடமாகாணத்திலும் நடைபெறும் அபகரிப்புக்கள் அச்சத்தை உச்சமாக்கியுள்ளது. இதனடிப்படையிலேதான் தமிழ் அரசியல் தலைவர்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்ற பெரும்பான்மையின குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றார்கள். அரசாங்கத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கைகள் யாவும் வடக்கு கிழக்கை எமது பாரம்பரிய தாயகமாக ஏற்றுக் கொண்டுள்ளன.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதிகளில் மொழி உரிமையுடன் அச்சமின்றி வாழக்கூடிய தமது இருப்புக்களை உறுதிப்படுத்தி கொள்வது எமது முக்கியமான அரசியற் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. 1957ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்திலும், 1965ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தின் போதும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்ற பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதனைத் தவிர்க்க வரைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டன. உதாரணமாக,

1. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் குடியேற்ற வாசிகளைத் தெரிவு செய்யும் போது அந்தந்த மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
2. அதற்கு மேலும் குடியேற்றவாசிகள் தேவைப்படும் இடத்து அந்தந்த மாகாணங்களில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
3. அதற்கு மேலும் குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்யும் போது வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது போன்ற ஏற்பாடுகள் மிகத் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன.

மேற் கூறிய 02 ஒப்பந்தங்களும் சிங்களத் தலைவர்களால் ஒருதலைப்பட்சமாக கைவிடப்பட்டமையால் இந்தப் பிரச்சனை தொடர்ந்தும் இருந்துகொண்டேயிருக்கின்றது.
அரச ஆதரவிலான குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்ளும்போது இலங்கையின் மொத்தக் குடிப்பரம்பலில் 12மூஐ மட்டும் தமதாக்கிக் கொண்டுள்ள தமிழ் பேசும் மக்கள் அவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஏனைய மொழி பேசுகின்ற மக்களைக் குடியேற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகள் அவர்கள் வாழுகின்ற பிரதேசத்திலேயே இல்லாமல் ஆக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையினர். சரித்திரத்திற்கு முற்பட்ட காலம் தொடக்கம் தமிழ் மக்களே இவ் விருமாகாணங்கள் தற்போது இருக்கும் இடங்களில் பெரும்பான்மையினராக இருந்து வந்துள்ளார்கள்.

இன்று இலங்கையில் காடுகளில் வசிக்கும் பறவை இனங்களுக்கும், மிருகங்களுக்கும் தனித்தனியாக சரணாலயங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் வாழும் முறைமைகள் குழப்பமடையாத விதத்தில் அவை தமது இயல்பான முறையிலேயே வாழ்வதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவது மட்டுமன்றி சரணாலயங்களுக்கு அருகே மிகை ஒலிகளை எழுப்புவது கூட சட்டத்திற்கு முரணானது என்று பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பௌத்த மதம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் மதமாகும்.

ஆனால் இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ்ப் பேசும் மக்களின் இருப்பை உறுதி செய்து அவர்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டு அவர்களை ஐக்கிய இலங்கைக்குள் சுயமாக வாழும் ஒரு பிரிவினராக ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படாதது விந்தைக்குரியது. அதற்கு மாறாக அவர்களின் பூர்வீகப் பகுதிகளைப் பறித்தெடுப்பதற்கே தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் முயன்றுள்ளன. 

இதனால்த்தான் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டுவரப்பட்ட போது 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் வரையப்பட்டு காணி சம்பந்தமான பல கலந்துரையாடல்கள் அப்போதைய தமிழ்த் தலைவர்களால் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் கிழக்கு மாகாணத்தில் "G" வலயம் வரை குடியேற்றப்பட்ட போது அதில் தமிழ் முஸ்லீம் மக்கள் அற்ப தொகையினரே பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த நடவடிக்கை இனப்பரம்பலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனைக் கருத்தில் கொண்டு மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற மாகாணங்களுக்கிடையிலான பாரிய திட்டங்களில் முழு இலங்கையின் இனவிகிதாசார அடிப்படையில் குடியேற்றவாசிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் "G" வலயம் வரை குடியேற்றப்பட்ட குடியேற்றவாசிகளில் அற்ப தொகையினரே தமிழ் முஸ்லீம் இனங்களைச் சேர்ந்தவராக இருந்தார்கள்.

இனவிகிதாசாரத்தின்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை எதிர்வரும் திட்டங்களில் ஈடுசெய்ய வேண்டும் என்ற முன்மொழிவு அப்போதைய மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திஸாநாயக்க அவர்களால் முன்மொழியப்பட்டது. அதாவது சிறுபான்மையினர்கள் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ளும் வரை ஏற்கனவே தமது விகிதாசாரத்திற்கு மேலதிகமாக காணிகளைப் பெற்றுக் கொண்ட பெரும்பான்மையினருக்கு காணி வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் காணிகள் வழங்கப்படாத தமிழ் முஸ்லீம் இன மக்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ர் வலயத்தில் வழங்கப்படவிருந்த காணிகளில் மிகப் பெரும்பாலான பங்கு தமிழ் முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்படும் என உத்தரவாதமும் வழங்கப்பட்டது.

இம் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கமைய பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பத்திரத்தின் அடிப்படையிலேயே 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் காணி சம்பந்தமான சரத்துக்கள் சேர்க்கப்பட்டன. காணிகளை வழங்கும் போது தேசிய இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் என்றும் எனினும் குறிப்பிட்ட திட்டத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அம் மாவட்டத்தில் உள்ள காணி அற்றவர்களுக்கு காணிகளை வழங்கி அதற்கு மேலதிகமாக உள்ள காணிகளை அந்த மாகாணத்தில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெளிவாக அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய இன விகிதாசாரத்துக்குப் பதில் மாகாண விகிதாசாரமே பேணப்பட வேண்டும். ஆனால் அதுகூடப் பேணப்படாமல் பெரும்பான்மையினரைக் குடியேற்றி வருவதே எமக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கின்றது.

இதுவரை வழங்கப்பட்டுள்ள காணிகளில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இனவிகிதாசாரப்படியான காணிகள் கிடைக்காததால் புதிய திட்டங்களில் அவர்களுக்குரிய பங்குகள் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படாத காணித் துண்டுகளை வழங்குவதற்கு ஒரு கால நிர்ணயம் நிர்ணயிக்கப்படவேண்டும். இப்படியான குடியேற்றங்கள் செய்யும் போது அந்த மாகாணத்தின் இனப்பரம்பலை மாற்றாத வகையில் குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவை எல்லாம் அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருக்கும் ஏற்பாடுகள். எனினும் இவற்றையெல்லாம் உதாசீனம் செய்து வடக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியில் "L" வலயம் என்ற பெயரில் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றத்தை தமிழ் மக்களின் பலத்த ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இந்த அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டுவருவது கவலை அளிக்கின்றது. தற்பொழுது அவ்வாறான சிங்கள குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்று அரசாங்கம் கூறிவருகின்றது. ஆனால் அவ்வாறு குடியேற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உண்டு. உதாரணத்திற்கு றுக்மல் து~hர லிவேரா  என்பவருக்கு கருநாட்டுக்கேணியில் டு வலயத்தில் ஒரு ஏக்கர் காணி கொடுக்கப்பட்டதற்கு அத்தாட்சி தற்போது என் கைவசம் உண்டு. அதனை இதனுடன் இணைத்து அனுப்புகின்றேன்.

வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் பாரம்பரியமாக இருக்கின்ற தமிழ் மக்களின் உறவைத் துண்டித்து வடக்கு வேறு கிழக்கு வேறு என்று பிரித்தாழும் தந்திரத்தின் உத்தியாகவே இவ்வாறான குடியேற்றங்களை அரசு மேற்கொள்கின்றது என்று நாங்கள் கருதுகின்றோம்.

இத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்புத் திட்டத்தில் கூறப்பட்ட வகையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கை "L" வலயத்திலும் எதிர்காலத் திட்டங்களிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்யும் போது மாகாணசபையின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும் என்று அரசியல் அமைப்புத் திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதும் எமக்குத் தெரியாத வகையிலேயே குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது கண்டிக்கப்படக் கூடியதும் அனுமதிக்க முடியாததுமாகும்.

இந்த ஐனநாயக விரோத இனப்பரம்பலின் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையையும் எமக்கு கிடைக்க வேண்டிய பங்கைத்தராது மேலும் தமிழ்ப் பகுதிகளில் நூறு வீதம் சிங்கள மக்களுக்கு காணிகளை வழங்குவதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். அதற்காக இன்று முல்லைத்தீவில் நடைபெறுகின்ற மக்கள் போராட்டத்தை நாங்கள் முற்றிலும் ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்து மகாவலி நீர் எமக்கு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றியும் மகாவலி அதிகாரசபையின் செயற்பாட்டை வட கிழக்கு மாகாணங்களில் முடிவுக்கு கொண்டுவருவதா இல்லையா என்பது பற்றியும் எமது மக்கள் வருங்காலத்தில் தீர்மானிப்பார்கள்.

No comments