சிங்களமே தமிழர் நிலங்களை விழுங்காதே - முல்லைத்தீவில் ஓங்கி ஒலித்த மக்கள் குரல்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில்  இன்றைய தினம் (28) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் பாரியளவிலான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது பங்கேற்றிருந்தனர்.

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலிஅதிகார சபை வழங்கியுள்ளது.



இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் என குற்றம் சாட்டி , அதனால் மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும். என்ற 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments