நல்லாட்சி மைத்திரியின் வழிநடத்தலே மகாவலி எல்?

மகாவலிஅதிகாரசபையின் நிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அணிதிரள பலதரப்புக்களும் கோரிக்கை விடுத்துவருகின்றன. நாளை 28  ம் திகதி முல்லைத்தீவில் வெகுசன அமைப்புக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மகாவலி அதிகாரசபையின் நிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கே யாழ்.பல்கலைக்கழக சமூகம்,சிவில் சமூக அமையம் என்பன தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.

கடந்த ஜனவரி பெப்ரவரி 2017 இல் கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி கரையோரப் பகுதியில் அரசகாணியில் அடாத்தாககுடியிருந்தனர் எனக் கூறி இரண்டு சிங்களமீனவர்களுக்கு எதிராக கரைத்துரைப்பற்று பிரதேசசெயலகத்தினால் அரசகாணி (ஆட்சிமீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் வழக்குதொடரப்பட்டது. வழக்கை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களையும் காணிகளை விட்டுவெளியேறுமாறு சனவரி 2018இல் கட்டளை வழங்கியது. அதன் பின்னர் காணிகளில் அடாத்தாககுடியிருந்த இருவரும் உயர் நீதிமன்றிற்கு அடிப்படை மனித உரிமைமீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தனர். பெப்ரவரி 2018இல் வழக்கைஎடுத்துக் கொள்ள மறுத்து உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. 

இது இவ்வாறிருக்க கடந்த 06ம் திகதி அன்று மாகாவலி அதிகார சபை மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களுக்கும் காணி அனுமதிப் பாத்திரத்தை வழங்கி அவர்களின் சட்டப்பூரவமற்ற காணி அபகரிப்பை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. 

மேற்படி நடவடிக்கையானது மத்திய அரசாங்கத்தின் சட்டமான அரசகாணி (ஆட்சிமீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் உரிய தமிழ் அரச அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கேலிக்குரிய தாக்கியுள்ளது. சட்டத்தின் ஆட்சி தமக்கு ஒரு போதும் நிலையான தீர்வுகளைத் தரமாட்டா என்ற புரிதலை இச்சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு மீள ஞாபகப்படுத்துகின்றன. அரசகாணியில் அடாத்தாக குடியேற்றப்பட்டஃகுடியமர்ந்த ஒருவரை நீதிமன்றம் மூலம் வெளியேற்றிய பின்னர் அதனை மீறி மகாவலி அதிகார சபை அந்நபர்களுக்கு காணி உரிமத்தினை வழங்குவது இலங்கையின் விசித்திரமான சட்டக் கட்டமைப்பில் மகாவலி அதிகாரசபைக்குள்ள எல்லையற்ற அதிகாரங்களை தமிழர்களுக்கு ஞாபகப்படுத்துவதாக உள்ளது. 

இவ்விடயத்தினை சட்டரீதியாக விளங்கிக் கொள்ளும் அதே வேளை நாம் இதனை அரசியல் ரீதியாக விளங்கிக் கொள்வது அதனை விடமுக்கியமானது. 

13ஆம் திருத்தத்தின் கீழ் அரசகாணிகள் தொடர்பில் மாகாணசபைகளுக்கு உண்மையில் குறிப்பிடத்தக்க அதிகாரம் எதுவும் இல்லை. ஆரசகாணி வழங்கல் தொடர்பில் மாகாண சபை கலந்தாலோசிக்கப்படவேண்டும் என்பதனைத் தவிர மத்திய அரசாங்கத்திடமே அரசகாணிகள் மீதானமுழுமையானகட்டுப்பாட்டை 13ஆம் திருத்தம் வழங்குகின்றது. 

அரசகாணிகள் தொடர்பில் இருக்கும் இந்த பெயரளவு அதிகாரங்கள் கூட மகாவலி அதிகார சபை சட்டத்தின் கீழ் வரும் திட்டங்களின் காணிகள் தொடர்பில் மாகாணசபைக்கு இல்லை. 

இந்த பின்னணியில் வைத்து நாம் மகாவலி அதிகாரசபையின் அரசியல் நோக்கங்களை விளங்கிக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். முல்லைத்தீவை சிங்கள பௌத்தமயமாக்கும் கருவிகளில் ஒன்று மகாவலி அதிகாரசபையால் 1980களில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட குடியேற்றதிட்டம்  மகாவலி ஆற்றோடு சம்பந்தப்படாத வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழர் பகுதிகளை வளைத்து எல் திட்டம் உருவாக்கப்பட்டு வடக்கு கிழக்கின் நிலத் தொடர்ச்சியை சிங்கள குடியேற்றங்கள் மூலமாக இல்லாமல் செய்வதே இதன் நோக்கம். 

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதியாகிவிட்ட வெலிஓயா பகுதி 1980களில் இருந்து தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களின் தொடர் முயற்சியால் சாத்தியமாகியுள்ளது. இதற்கு தடையாக இருந்தது தமிழர்களின் ஆயுத பலம் ஒன்றே. அது முறியடிக்கப்பட்டபின் திட்டம் அதன் முழு வீச்சில் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.  

யுத்தத்தின் போது குடியேற்றப் படமுடியாதிருந்த முல்லைத்தீவின் கரையோர பகுதிகளான கொக்கிளாய்,நாயாறு பகுதிகளை சிங்களமயமாக்கும் திட்டம் 2009க்குப் பின்னர் வேகம் பெறத் தொடங்கியது. இதில் மகிந்த ராஜபக்ச, 'நல்லாட்சி' 'சிறிசேனஆட்சிகளுக்கிடையில் எந்தபேதமும் இல்லை. 

மகாவலிஅதிகார சபை நேரடியாக சனாதிபதி சிறிசேனவின் மகாவலி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் கீழ் வருகின்றது. ஆகவே தற்போது நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமத்தினை வழங்குவதில் சனாதிபதியின் நேரடியான பங்களிப்பு இல்லாமல் சாத்தியமாகியிருக்கமுடியாது. 

இந்த நடவடிக்கை மூலம் சனாதிபதி சிறிசேன தனது 'நல்லாட்சி' அரசாங்கத்தின் இரட்டை முகத்தை மீள ஒரு முறை நிரூபித்துள்ளார். ஒருபுறம் காணிவிடுவிப்பும் இன்னொருபுறம் காணிஅபகரிப்பும் என இவ்வரசாங்கம் தமிழர்களையும் உலகத்தையும் ஏமாற்றுகின்றது. 

ஒரு பக்கம் தமிழர்களுக்கானஅரசியல் தீர்வைவழங்குவோம் என்று கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் நீண்டகரங்களான மகாவலி அதிகார சபை போன்றவற்றை முழுமையாக பயன்படுத்தி,சிங்கள பௌத்த குடியேற்றத்தை வீரியமாக முன்னெடுத்து,அரசாங்கம் தமிழர்களைமீண்டும் விரக்தி நிலைக்கு ஆட்படுத்துகின்றது. 

முகாவலி அதிகார சபை மாத்திரமல்லாதுதொல்லியல் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்து வரும் நிலஅபகரிப்பு அபாயங்களையும் எதிர்கொள்ளவேண்டியவர்களாக நாம் உள்ளோம். இந்த நெருக்கடிகளைக் கையாள தமிழ் மக்கள் பல்வேறு பட்ட அரசியல் உத்திகளைக் கையாளவேண்டியவர்களாக உள்ளோம். சிவில் சமூகமாக மக்களை அணி திரட்டி போராடுவது அதில் முக்கியமானது. அந்தவகையில் நாளை நடைபெறவுள்ள போராட்டம் முக்கியமானது. இந்த எதிர்ப்பை மாற்றத்தை நோக்கி உந்த தொடர்ச்சியான பல்முனைப்பட்ட செயற்பாடுகள் அவசியாமின்றன. ஆவை தொடர்பான செயற்பாடுகளை தமிழ் அரசியல்,சமூகஅமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

No comments