கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடகமாடுகின்றனர்:சுரேஸ்!

மகாவலி வலயத்தின் ஊடாக தமிழ் மக்களது காணிகள் சுவீகரிக்கப்படவில்லையென தெரிவித்ததன் மூலம் மைத்திரி பகிரங்கமாக பொய் சொல்கின்றார்.மகாவலி எல் வலயத்தின் கீழ் தமிழ் மக்களது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களவர்களிற்கு வழங்கப்பட்டமை தொடர்பில் புகைப்படப்பிரதிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனையெல்லாம் தெரிந்து கொண்டும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி நிலசுவீகரிப்பு நடைபெறவில்லையென சொல்லிய போது வாய்மூடியிருந்ததாக சொல்லப்படுவது ஏமாற்றுவேலையே என தெரிவித்துள்ளார் சுரேஸ்பிறேமசந்திரன்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமான அவர் இன்று முல்லைதீவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவை சிங்கள மயமாக்கும் மகாவலி நில ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று செவ்வாய்;கிழமை முன்னேடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்திற்கு முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக் காரர்கள் அங்கிருந்து ஆர்ப்பாட்டப் பேரணியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை சென்றிருந்தனர்.

இதன் பின்னர் பிரதேச சபையின் பொது மைதானத்தில் ஒன்று கூடிய அவர்கள் நில அபகரிப்பு எதிராக சுலோகங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மகாவலி எல் வலைய திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் பெருமளவு காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

மகாவலி திட்டத்திற்கு மாகாண சபை உட்பட, பிரதேச சபை மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள போதும், முல்லைத்தீவினை சிங்கள மயமாக்குவதற்காக இத்திட்டத்தின் ஊடாக காணிகளை அபகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இவ்வாறு சிங்கள மயமாக்கலுக்காக காணி அபகரிப்பினை  எதிர்த்து போராட்டமொன்றை முன்னெடுக்க  மகாவலிக்கு எதிரான தமிழர் மரவுரிமை பேரவை அழைப்பினை விடுத்திருந்தது.

இவ் நில மீட்பு போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் சிவில் சமூகம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பொது அமைப்புக்களும் அமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். அத்தடன் நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.  

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கான கோரிக்கை மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments