ஆண்டுக்கு 200 வைத்தியர்கள் இலங்கையில் காணாமல் போகின்றனர்


இலங்கை அரசு ஒவ்வொரு வருடமும் 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றபோதிலும்,அவர்களுள் 200 பேர் வெளிநாடுகளுக்கும் தனியார் வைத்தியசாலைகளுக்கும் சென்று விடுகின்றனர்.மீதி வைத்தியர்களை நாட்டில் உள்ள அணைத்து வைத்தியசாலைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து மிகவும் சிரமத்தின் மத்தியில் சிறந்த சேவையை வழங்கி வருகிறோம் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் கூறினார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் அரச ஒசுசல கட்டட திறப்பு விழாவும் புனர்வாழ்வு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று காலை [16.08.2018] இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் பல குறைபாடுகள் உள்ளன.வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு உள்ளது.ஒரு வருடத்துக்கு நாம் 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றோம்.

அவற்றுள் 200 பேர் எங்களை விட்டுச் செல்கின்றனர்.இவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர்.மீதியாகவுள்ள ஆயிரம் வைத்தியர்களை நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றோம்.இன்னும் 150 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்க முடியாமல் உள்ளோம்.

அதேபோல்,2200 வைத்திய ஆலோசகர்கள் சுகாதார அமைச்சின்கீழ் வேலை செய்கின்றனர்.அதிகமான ஆலோசர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.இது கவலைக்குரிய விடயம்.

இவ்வாறான குறைபாடுகளுடனும் சவால்களுடனும்தான் நாம் இந்த சுகாதார சேவையை சிறந்த முறையில் வழங்கி வருகின்றோம்.இன்னும் இரண்டாயிரம் இருதய சத்திர சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

இவ்வாறான குறைபாடுகளின் மத்தியில் எமது வைத்தியர்களும் தாதியர்களும் சிறந்த சேவையை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.அதற்காக அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொளிறேன் - என்றார்.

No comments