பெண்களை பாதுகாக்க கோரி கிளியில் ஆர்ப்பாட்டம்!


வடக்கில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

அதிலும்  கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியும் இன்றைய தினமான வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் முன்னாள் ஈபிடிபி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே ! பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய் அரசே! பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தை வலுவாக்கு! நித்தியகலா கொலையாளிகளை விரைந்து கைது செய் தாமதியாது நீதி வழங்கு நாட்டில் கேள்விக்குள்ளாகிறது சிறுமிகள் பெண்களின் பாதுகாப்பு. சட்டவிரோத போதை பொருள் பாவனையாளர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை வேண்டும் வழங்கும் தண்டனைகள் வருங்காலத்தில் குற்றங்களை தடுக்க வழி செய்ய வேண்டும்! வேண்டும் வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்! வழங்கு வழங்கு சட்டத்தின் பாதுகாப்பை பெண்களுக்கு வழங்கு! பெண்களை பாதுகாக்க சமூகமே விழித்துக்கொள் ! எங்கள் பெண்களுக்கு ஏன் இந்த நிலை? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.


ஆர்பாட்டத்தின் இறுதியில் டிப்போச் சந்தியிலிருந்து கிளிநொச்சி பொலீஸ் நிலையம் நோக்கி சென்றவர்கள் அங்கு காவல்துறை அதிபருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

No comments