20 ஆயிரம் ரூபாவுடன் கொழும்பில் எப்படி சீவிக்க முடியும்! மட்டக்களப்பு, அம்பாறை பட்டதாரிகள் விசனம்!

பட்டதாரிகளை அரசசேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் பட்டதாரிகளுக்கு பயிற்சி பயிலுனர்களாக நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
 
தங்களுக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ளும் ஆவலுடன் வடக்கு கிழக்கு உட்பட பல இடங்களில் இருந்து சென்ற பட்டதாரிகள் தங்களது நியமனக் கடிதத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுனர்களாக பயிற்சியளித்தல் திட்டத்தின் கீழ் மாதம் 20 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு முதற்கட்டமாக பட்டதாரிகள் சிலருக்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு ஊடாக இந் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பட்டதாரிகளுக்கு கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகங்கள் மற்றும் அரசநிறுவனஙகளில்; பயிலுனர்களாக கடமையாற்றுமாறு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து வேலைவாய்ப்பு கனவோடு சென்றவர்கள் பலரின் தலையில் இடிவிழ்ந்த உணர்வு ஏற்பட்டுள்ளதாக பயிலுனர் பட்டதாரிகள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிழக்கிலுள்ள பல பட்டதாரிகளுக்கு கொழும்பிலும் கொழும்பிற்கு வெளியிலும்; வடக்கு மாகாணத்திலும் நியமனங்களை வழங்கியுள்ளனர். பல காலமாக படித்துவிட்டு வேலையில்லாது பட்டதாரிகள் கஸ்டப்பட்டுவந்த நிலையில் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள பயிற்சி பயிலுனர் நியமனமே ஏமாற்றத்தை தந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது 20 ஆயிரம் ரூபா சம்பளத்திற்க்கு வேலை கிடைத்த கிழக்கு பட்டதாரிகள் பலர் திருமணமாகி கைக்குழந்தையுடன் இருக்கின்றனர். இந் நிலையில் அவர்களுக்கு கொழும்பிலுள்ள அரச நிறுவனங்களில் பயிலுனர்களாக இணைந்து கொள்ளுமாறு நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளமை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலைக்கு ஒப்பானது. என விசனம் தெரிவிக்கின்றனர். தற்போதைய வாழ்க்கைச் செலவு சுமைக்கு மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பட்டதாரிகள் கொழும்பில் பயிற்சி பயிலுனர்களாக மாதம் 20 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு எவ்வாறு சீவிக்கமுடியும்?

அரசினால் வழங்கப்பட்டுள்ள பயிற்சி பயிலுனர் பட்டதாரிகள் நியமனத்தை அவர்களது சொந்த மாவட்டங்களில் பயிற்சியாளர்களாக இணைத்துக்காள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுக்கின்றனர். இதற்கிடையில் வழங்கப்பட்டுள்ள நியமனத்தை மாற்றித்தருவதாக கூறி சில அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் பட்டதாரிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலிலும் லஞ்சம்பெற்றுக் கொள்வதிலும் ஈடுபடுவதாகவும் தெரியவருகின்றது.

No comments