நாளை கல்வியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு!


நாளைய தினம்(04)திட்டமிட்டவாறு கல்வியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு நடைபெறும் என உறுதிபடத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கல்வித் துறையை தரமான விதத்தில் பாதுகாப்பதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் சுகயீன விடுமுறையை அறிவித்து ஒற்றுமையுடன் பணியைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை(03) அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முறையற்ற அரசியல் நியமனங்களால் கல்வியைச் சீரழிக்க அனுமதிக்கப்போவதில்லை. தமது அரசியல் நலனுக்காகக் கல்வியைச் சீரழிக்க முயலும் அரசியல்வாதிகளுக்கு எவரும் அஞ்சத் தேவையில்லை.
அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் அமைச்சரவை அனுமதியினூடாகத் தகுதியற்ற அரசியல் எடுபிடிகள் கல்வி நிர்வாகசேவைக்கும், ஆசிரியகல்விச் சேவைக்கும், அதிபர் சேவைக்கும் உள்வாங்கப்படல் இலங்கைக் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.
இதனால் ,சேவைப் பிரமாணக்குறிப்புகளுக்கமைய போட்டிப்பரீட்சைகளின் மூலம் தகுதியான ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விநிர்வாகசேவை உத்தியோகத்தர்களை சேவைகளில் உள்வாங்குவதற்கு இருக்கும் சந்தர்ப்பம் பலவருடங்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கல்வியாமைச்சு உட்பட மாகாண மற்றும் வலயப் பாடசாலைகள் சம்பந்தமான தீர்மானங்கள் யாவும் இப்படியான தகுதியற்ற அரசியல் எடுபிடிகளின் ஆணையின் கீழ் செயற்படுமாயின் இலங்கையின் கல்வித்துறையில் பாரிய முறைகேடுகள் நிகழும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் குறுக்கு வழியால் உட்புகும் தகுதியற்றவர்களால் தகுதியானவர்களின் பதவியுயர்வுகள் தொடர்ந்தும் பாதிக்கப்படவுள்ளதுடன் தகுதியானவர்கள் தகுதியற்றவர்களின் ஆணையின் கீழ் செயற்படும் அவமானங்களும் நடைபெறும்.
கல்வித்துறையை முறையற்ற அரசியல் நியமனங்களில் இருந்து முழுமையாக விடுவிப்போம்.
அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் முகமூடியைப் போர்த்துக்கொண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் நுழைந்து கொள்ளத் துடிக்கும் தகுதியற்றத் தமது அரசியல் அடிவருடிகளுக்கு நியமனம் வழங்குவதே அரசினது நோக்கமாகும்.
இதனால் ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் ஏற்படவுள்ள கேடுகளையும்,அவமானத்தையும் எண்ணிப்பாருங்கள் !
மேற்படி தொழில்களுக்கு முறையற்ற நியமனங்கள் வழங்கப்படுவதன் மூலம் ஆசிரிய சமூகத்திற்கும், இலங்கைக் கல்வித்துறைக்கும்,கற்கவுள்ள எதிர்கால சந்ததிக்கும் பெரும் சவாலும் அவமானமுமே இதன் விளைவாகக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்!
அரசியல் இலாபம் தேடும் குறுகிய மனப்பான்மையில் முழுக் கல்வியையும் பணயம் வைத்து இலங்கைக் கல்வி நிர்வாக சேவைக்கும், இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவைக்கும்,இலங்கை அதிபர் சேவைக்கும் தகுதியற்ற ஆயிரக்கணக்கானோரைப் பின்கதவால் நுழைப்பதற்கு இந்த அரசு முயற்சி செய்கின்றது. இதற்காக அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து அடிப்படை நடவடிக்கைகளை நிறைவேற்றிவிட்டது.
முதலாவதாக மேற்படி நபர்களுக்குப் பதவிவழங்காது வேதனம் மற்றும் சலுகைகளை வழங்கவுள்ளது. பின்னர் நியமனங்களை வழங்கவுள்ளது.முன்னைய அரசாங்கமும் இவ்வாறு முயற்சித்தபோதும் அவற்றை முறியடிப்பதில் நாம் வெற்றிபெற்றோம்.
இலங்கை கல்வி நிர்வாகசேவை, இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை என்பவற்றில் இணைந்துகொள்வதற்கு பொருத்தமான நடைமுறை ஒழுங்குகள் உள்ளன.
அந்த முறையான நடைமுறைகளுக்கு அமைய அச்சேவையில் உள்வாங்கப்படுவதற்கு எவ்வித அழுத்தங்களும் அரசால் கொடுக்கப்படுவதில்லை.
இலங்கை கல்வி நிர்வாகசேவையில் இணைந்து கொள்வதற்கு இவர்களுக்குச் சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கமைய சந்தர்ப்பங்கள் உள்ளன.
இருந்தும் இவ்வாறான ஒழுங்கற்ற முறையில் உள்வாங்கப்படுவதானது முறையாக நியமனம் பெறமுன்வரும் ஆசிரியர்கள்,அதிபர்கள், பட்டதாரிகளுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்கிறது. இதனால் சேவையின் தரமும், புனிதமும் இல்லாது போய்விடும்.
இவ்வாறாகச் சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக வழங்கப்படும் முறையற்ற நியமனங்களால் இலங்கையின் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எமது ஒன்றுபட்ட எதிர்ப்பின் மூலம் வெளிப்படுத்தச் சகல ஆசிரிய,அதிபர்,கல்விச் சேவையாளர் சங்கங்களும்,கல்வி நிர்வாகசேவை சங்கமும் இணைந்துள்ளன.
இதன்படி,புதன்கிழமை(04.07.2018) சகல பாடசாலைகள்,வலயக்கல்விப் பணிமனைகள்,மாகாணக்கல்வித் திணைக்களங்கள்,கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிலையங்களிலும் சேவைசெய்யும் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியகல்விச் சேவையாளர்கள், கல்வி நிர்வாகச் சேவை அதிகாரிகள், சுகயீனவிடுமுறையை அறிவித்து பணியைப் புறக்கணித்து எமது சமூகக் கடமையைப் பொறுப்புடன் முன்னெடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments