நாயாற்றில் ஆக்கிரமிப்பிற்கெதிராக போராட்டம்!


முல்லைத்தீவு நாயாறுமற்றும் நந்திக்கடல் ஆகிய பிரதேசங்களில் தொல்லியல் திணைக்களத்திற்கு பொதுமக்களது காணிகளை பிடித்துக்கொடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இப்பகுதிகளில் 21 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை இயற்கை  ஒதுக்கிடங்களாக பிரகடனப்படுத்தி சுவீகரிக்கும் அரசினது முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்ற நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்கான காணி சுவீகரிப்பு சத்தமின்றி முன்னெடுக்கப்படவிருந்தது.

திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த நிலஅகபரிப்புக்கள் தொடர்பில் யூன் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் தரப்புக்கள் சுட்டிக்;காட்டியிருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அபகரிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி கண்காணிப்பின் கீழேயே அபகரிக்கப்படுவதாக வட மாகாண சபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுமிருந்தனர்.

இந்நிலையில் இன்று கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்,உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள்,பொதுமக்கள்,பொது அமைப்பினை சேர்ந்தவர்களென பலரும் பங்கெடுத்திருந்ததுடன் நாயாறு பகுதியில் நிலசுவீகரிப்பிற்கென வந்திருந்த நிலஅளவை திணைக்களத்தினரை முற்றுகையிட்டு விரட்டியடித்துமுள்ளனர்.

No comments