முதலில் அதிகார பகிர்வு பற்றி சுமந்திரன் பேசட்டும்:முன்னணி!

வடமாகாணசபைக்கு சட்டம் ஓழுங்கைப்பேணுவதற்கான அதிகாரம் இல்லை.அத்தகைய அதிகாரங்களை மாகாணசபைக்கு இல்லையென்பதை முதலமைச்சரும் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்.

ஆனால் இதனையெல்லாம் மூடிமறைத்தும் வடமாகாணசபைக்கும் சட்டமொழுங்கை பேணுவதற்கான அதிகாரங்களை வழங்குமாறு இலங்கை அரசிற்கு கூறுவதற்கும் தயாராக இல்லாத தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெறுமனே குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துக்கொண்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கெடுத்திருந்த அவர் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் தனது வீட்டில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் சட்டமொழுங்கை பேண காவல்துறை தவறிவிட்டதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததுடன்; அதனை பேண விடுதலைப்புலிகள் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புக்குழுக்களை கட்டியெழுப்புவது தொடர்பிலும் பிரஸ்தாபித்திருந்தார்.

இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த மணிவண்ணன் சட்டம் ஒழுங்கைப்பேணும் வகையில் அதிகாரத்தை அரசிடம் கேட்க தயாராக இல்லாத சுமந்திரன் ஒருபுறம் முதலமைச்சரை குற்றஞ்சாட்டி மறுபுறம் அரசை காப்பாற்ற முற்படுவது பற்றி சுட்டிக்காட்டியிருந்தார்.

முதலில் சுமந்திரன் பிரயோசனமற்ற இலங்கை காவல்துறையினை காப்பாற்றுவதை கைவிட்டு சட்டம் ஒழுங்கை பேணும் அதிகாரத்தை வடமாகாணசபைக்கு பெற்றுக்கொடுக்க உத்தியோகபூர்வமற்ற அமைச்சினை கொண்டுள்ள இந்த அரசை கேட்கட்டும்.பின்னர் விழிப்புக்குழுக்கள் பற்றி பேசவரட்டுமென தெரிவித்தார்.  

No comments