யாழில் 40ஆயிரம் படைகள்!


யாழ். குடாநாட்டில் படைக்குறைப்பு முன்னைய மஹிந்த அரசின் காலத்தில் ஆரும்பிக்கப்பட்டதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். அவ்வகையில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் படைக்குறைப்பு தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையே தெரிவித்துள்ளதாக இராணுவ துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கில் இருந்து படைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக, அவர் விளக்கமளித்துள்ளார்.யாழ். குடாநாட்டில் தற்போது, 51, 52, 55 என மூன்று டிவிசன்கள் நிலை கொண்டுள்ளன. இவற்றைச் சேர்ந்த சுமார் 14 ஆயிரம் படையினர் தற்போது எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.

கடந்த 2017 மார்ச் மாதம்,  யாழ். படைகளின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர், யாழ். குடாநாட்டில் இருந்து படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.

2009ஆம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, யாழ் குடாநாட்டில் சுமார் 45 ஆயிரம் படையினர் நிலை கொண்டிருந்தனர்.
எனினும், போர் முடிந்து 18 மாதங்களுக்குப் பின்னர், 2010 ஒக்ரோபரில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்தது.

2014 ஜனவரி மாதம், மேஜர் ஜெனரல் உதய பெரேரா,  யாழ். படைகளின் தளபதியாக பொறுப்பேற்ற போது, குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 14,600 ஆக குறைக்கப்பட்டிருந்தது.

2015 அதிகர் தேர்தலுக்கு முன்னரே, குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 14 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் குறிப்பிட்ட மூன்று டிவிசன்களிலும் தலா பத்தாயிரம் படையினர் வீதம் 30ஆயிரம் படையினர் யாழில் உள்ளனர்.எனினும் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் இப்படையணிகள் பலத்த இழப்புக்களை சந்தித்தமையால் அதன் ஆளணி குறைந்துள்ளதேயன்றி படையினரின் குறைப்பு நடைபெறவில்லையென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
படையினருக்கு அப்பால் கடற்படை,விமானப்படை,காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவென 40ஆயிரம் வரையில் பாதுகாப்பு தரப்பினர் நிலைகொண்டிருப்பது உறுதியாகியிருக்கின்றது.

No comments