தமிழரசின் சூட்டில் குளிர்காயும் தவராசா முதலமைச்சரை பதவி விலக கோரிக்கை


முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியது சட்டரீதியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கௌளரவமாக ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தார்மீகப் பண்போடு  தனது பதவியைத் துறக்கவேண்டும். அதுவே  ஜனநாயகப் பண்புமாகும் இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில்  கருத்து வெளியிட்ட அவர் முதலமைச்சரை கடுமையாக வசைபாடியிருந்தார்.

பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருந்தது  சட்டத்துக்கு முரணானது என அப்போதே தங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம் எனவும் மாகாண சபையின் சட்ட எல்லை வரம்புகள் என்னவென்று தெரியாமல்தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியிலிருக்கிறார். எல்லையை மீறிய விடயங்களையும் பேசுவார், எல்லைக்குட்பட்ட விடயங்களையும் நடைமுறைப்படுத்தத் தெரியாது என்றும் அவர் சாடியுள்ளார்.

இந்த அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, முதலமைச்சரின் செயற்பாடுகள் எந்தவொரு சட்டபூர்வமும் அற்றவை என எடுத்துக்காட்டியிருக்கின்றது. ஆகையால் இந்தத் தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தர்மீகரீதியாக தனது பதவியிலிருந்து விலகவேண்டும். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், இவ்வாறான சூழலில், சட்டரீதியாக பதவி விலகவேண்டிய தேவையிருந்திராத போதும், தனது கொள்கை மக்களால் தோற்கடிக்கப்பட்டது என்ற தார்மீகப் பண்பில் அவர் பதவி விலகியிருந்தார்.

எனவே தனது நடவடிக்கையை நீதிமன்றினாலேயே பிழையென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளநிலையில் முதலமைச்சர் கௌரவமாக பதவி விலகுவதே சிறந்தது. அவருக்கு மாகாண சபை விடயங்கள் தெரியாது என்பதற்கு இன்னுமொரு உதாரணம், ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வந்த போது, மாகாண சபையின் காலத்தை நீடிக்கும்படி கேட்டுக்கொண்டது.

அவ்வாறு சட்ட ஏற்பாடு அல்லது அரசியலமைப்பு ஏற்பாடு இல்லாத சூழ்நிலையில், ஜனாதிபதியை அவ்வாறு கேட்டது, முதலமைச்சருக்கு மாகாண சபையை எவ்வாறு நடத்தவேண்டும் என்பது தெரியாது என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மேலும் தெரிவித்தார்.

No comments