வயோதிபத்தை கணக்கிலெடுங்கள்:முரளி வல்லிபுரநாதன்

அடுத்த முதலமைச்சர் பதவிக்கு தமிழ் கட்சிகள்  யாரை தெரிவு செய்வது என்ற அரசியல் போட்டிக்கு மத்தியில் தமிழர்களின் எதிர்காலம் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு உட்படாமல் மேம்படவேண்டும் என்றால்  முதலமைச்சர் பதவிக்கு வருபவர் சமயோசித புத்தியும் சிந்தனைத் தெளிவும் முடிவுகளை சுயமாக எடுக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.  

நான்  யாழ் மருத்துவ சங்கத்தின் தலைவராக இருந்த 2014 ம் ஆண்டு கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரனை சுன்னாகம் தண்ணீர் மாசடைந்த விவகாரம் தொடர்பாக சந்தித்தபோது அவர் கூட்டம் தொடங்கும்போது கூட்டங்களில் பேசும் விடயங்கள் எதுவும் தனக்கு பிறகு  ஞாபகம் வராது என்றும் எனவே அனைத்து விடயங்களையும் பதிவு செய்யப் போவதாகவும் அறிவித்து பதிவு செய்தார். அவருடன் பேசிய போது அவர் சிந்தனைத் தெளிவற்றவராகவும் முடிவுகளை எடுக்கும் ஆற்றல் இன்றியும் காணப்பட்டார். 

இந்த நிலையில் 4 வருடங்களின் பின்னர் 80 வயதை அண்மித்துள்ள முதலமைச்சர் தொடர்ந்தும் இந்த பதவியை மேலும் 5 வருடங்கள்  வகிப்பதற்குரிய ஆரோக்கியமும் அறிவாற்றலும் அவருக்கு இருக்கிறதா என்பதை நேர்மையாக அவருக்கு ஆலோசனை வழங்கும் வைத்தியர்களிடமும் கேட்டறிந்து தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். வட மாகாண முதலமைச்சரே ஏனைய மாகாண முதலமைச்சர்களை விட மூப்பாக இருக்கிறார் என்ற உண்மையையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.   

இந்தக் கோரிக்கையை நான் இந்த இடத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு முன்வைக்கவில்லை. இதே கோரிக்கை கௌரவ எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கும் பொருந்தும். இந்த இடத்தில்  கௌரவ எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்  அவர்களுக்கு  நான் மருத்துவர் என்ற முறையில் ஆலோசனை வழங்கி இருப்பதால் மருத்துவ ஒழுக்க நெறிகளுக்கு அமைய அவருடைய உடல்நிலை பற்றி மக்களுக்கு வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறேன் என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

 ஆரோக்கியம் குன்றிய நிலையில் இருக்கும் அனைத்து மூத்த தமிழ் தலைவர்களும் முக்கிய பதவிகளை தொடர்ந்தும் வகித்துக் கொண்டு இருக்கும் போது உடல்நிலை  மேலும் பலவீனமாகிவிட்டால் தமிழர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள் என்ற உண்மையை உணர்ந்து சுயநலமற்று அடுத்த தலைமுறையினருக்கு முக்கிய பதவிகளை  வழங்கி அவர்களது ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் செயற்பட முன்வர வேண்டும். தமிழ்நாடு கருணாநிதி போல இயலாத வயதில் தலைமை பதவியில் இருப்பதற்காக தொடர்ந்தும் தமிழர்களின் எதிர்காலத்தை அழிக்கக் கூடாது. ஈழத்தமிழர்களை பொறுத்த வரையில் ஆரோக்கியம் குன்றியநிலையில் வேறு நபர்களால் தயாரிக்கப்படும் அறிக்கைகளை வெளியிட்டு பதவிகளில் நீடித்து இருப்பவர்கள் இலகுவில் ஐந்தாம் படையினரதும் அந்நிய சக்திகளினதும்  கட்டுப்பாட்டுக்கு இலகுவில்  உட்படக் கூடியவர்களாக இருப்பார்கள் என்ற உண்மையை ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தில் கரிசனை உடைய அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும். 

மேலும் தமிழ் கூட்டமைப்பு உடைந்து தமிழ் கட்சிகள் பலமிழந்து இருக்கும் இந்த நிலையில் தமிழ் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்ட ஊழலுக்கு அப்பாற்பட்ட மொழிப் புலமையும் சட்ட நுணுக்கமும் தெரிந்த மக்கள் தலைவர்களை அடையாளம் கண்டு ஒற்றுமையாக  உள்வாங்கி  சனநாயக அரசியலை எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து பதவி மோகத்துடன் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உள்ளூர் ஆட்சித்தேர்தலில் இடம் பெற்றது போல் தென்னிலங்கையின் பேரினவாதக் கட்சிகள் தமிழர் தேசத்தில் அதிக பலம் பெற்று வேரூன்ற தொடங்கிவிடும் என்பது நிதர்சனம். 

No comments