யாழ் பல்கலையில் 1706 பேருக்கு வெள்ளியன்று பட்டமளிப்பு !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 07 அமார்கவுளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் கலை, மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் மற்றும் பட்டப்பின் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த ஆயிரத்து 223 உள்வாரி பட்டதாரிகளும், 43 டிப்ளோமா தாரிகளும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதோடு, யாழ். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த 440 வெளிவாரிபட்டதாரிகளின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுமுள்ளன.

இம்முறை, இருவர் கலாநிதிப் பட்டங்களையும், 07 பேர் முதுமெய்யியல்மாணி பட்டங்களையும் , வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 170 பேர் முதுகல்விமாணி பட்டங்களையும் , 07 போர் சுகாதார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 21 பேர் சைவ சித்தாந்தத்தில் முதுமாணி பட்டங்களையும் , 11 பேர் முதுவியாபாரமாணி பட்டங்களையும் , 04 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழ்களையும், 95 பேர் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணி பட்டங்களையும் , ஒருவர் மருத்துவ விஞ்ஞானமாணி பட்டத்தையும், 31 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டங்களையும் , 78 பேர் விஞ்ஞானமானி சிறப்பு மற்றும் 79 பேர் விஞ்ஞானமாணி பொதுப் பட்டங்களையும், 16 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டங்களையும், 08 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டங்களையும், 07 பேர் விவசாய விஞ்ஞானமாணி பட்டங்களையும், 146 பேர் நுண்கலைமாணி ( கா்நாடக சங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பு) பட்டங்களையும், 459 பேர் சிறப்பு கலைமாணி, மற்றும் 81 பேர் பொதுக் கலைமாணிப் பட்டங்களையும் பெறவிருப்பதோடு, 05 பேர் விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 09 பேர் இதழியலில் தகைமைச் சான்றிதழ்களையும், 16 பேர் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 13 பேர் மனிதவள முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும் பெறவிருக்கின்றனர்.

வெளிவாரியாகப் பட்டங்களைப் பெறுகின்ற 374 கலைமாணிப் பட்டதாரிகளினதும், ஒரு இசைமாணிப் பட்டதாரியினதும், 03 நடனமாணி பட்டதாரிகளினதும் 37 வணிகமாணி, 25 வியாபார முகாமைத்துவமாணி பட்டதாரிகளினதும் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன.

மொத்தமாக இம்முறை ஆயிரத்து 706 பட்டங்கள் வழங்கப்படவிருப்பதோடு, சகல கற்கை நெறிகளுக்குமாக 34 தங்கப் பதக்கங்களும், 48 பரிசில்கள் மற்றும் புலமைப்பரிசில்களும் வழங்கப்படவிருக்கின்றன.

No comments