பாவப்பட்ட பணத்தை திருப்பி வழங்குவோம்! - ஈபிடிபி தவராசாவுக்கு செருப்படி


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னால் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா நிதியினை மீள வழங்குமாறு கோரி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஈபிடிபி உறுப்பினர் தவராசாவின் பணத்தினை மீள வழங்கி செருப்பால் அடித்தற்போன்ற செயலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கென பொது மக்களிடமிருந்து பண வசூலிப்பில் ஈடுபட்டுள்ள அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு,




“எமதருமை உறவுகளே!
மே 18 என்பது  எல்லாத் தமிழர்களின் நெஞ்சையும் உறைய வைப்பது .தமிழினப் படுகொலைகளின் குறியீடாக இந்நாள் உலகத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பூரில் ஆரம்பித்து வாகரை, மன்னார் வழியாக முள்ளிவாய்க்கால் வரை எம்மினம் சந்தித்த அவலங்களை நினைவு கூர  பலதரப்பினரும் இவ்வாண்டு தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அந்தவகையில் வடமாகாணசபை உறுப்பினர்களின் மாதாந்தக் கொடுப்பனவிலிருந்து ரூபா ஏழாயிரம் அறவிடுவதெனத்  தீர்மானிக்கப்பட்டிருந்தது.     

இந்த வகையில் தனது பெயரில் அறவிடப்பட்ட   ரூபா ஏழாயிரத்தையும் திருப்பி வழங்குமாறு வடமாகாணசபை எதிர்க்கட்சித்  தலைவர் தவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறான சிந்தனை உள்ளவர்களின் நிதிப்பங்களிப்புடன் எமது பிள்ளைகளை நினைவு கூருவது எமது உறவுகளின் ஆத்மாக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
எங்களது வலி, வேதனை , கண்ணீர் எல்லாம் எங்களோடே இருக்கட்டும். இதன் தாக்கமெல்லாம் தெரியாமல் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அவர் வளர்க்கப்பட்ட   முறையின் விளைவே யாகும்.   முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த இவர் அங்கம் வகித்த கட்சியின் அதிகாரத்திலிருந்த யாழ். மாநகர சபையில் தீர்மானம் கொண்டுவந்தபோது மேயர் அதனை அனுமதிக்கவில்லை. அங்கு பொதுமக்கள் கொல்லப்படவில்லை என யாழ். நகரத்தில் ஆர்ப்பாட்டம் செய்து உலகுக்கு அறிவித்த இவர்களது பாவப்பட்ட பணம் இந்த நிகழ்வுக்குச்  சேராமலிருப்பது பொருத்தமே .   

ஆகவே நாங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு ரூபா வீதம் பங்களித்து இந்த ஏழாயிரம் ரூபாவையும் வடக்கு மாகாணசபையினரிடம் ஒப்படைப்போம். உணர்வுள்ள ஏழாயிரம் பேர் தலா ஒரு ரூபாய் தாரீர் !

பாவம் தவராஜா . இக் கொடுப்பனவு இல்லாமல் அவரது குடும்பம் சிரமப்படுகிறது போல் தெரிகிறது. அந்தச் சிரமத்தை நாம் இணைந்து போக்குவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில். அரசியலைத் தொழிலாகக்  கொண்டோரின் வயிற்றிலடித்து அவர்களது மனைவி, பிள்ளைகளின் சாபத்துக்கு இலக்காக வேண்டாம்.
எனவே ஒரேயொரு ரூபாயினை தமிழ் பேசும் மகனும் வழங்கி உணர்வுள்ள உறவுகள் நாம் என்பதை நிலைநாட்டு வோம்”- என்றுள்ளது

No comments