Header Shelvazug

http://shelvazug.com/

பனங்காட்டான் எழுதிய ''முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக!''

வடக்கின் நினைவேந்தலால் பாரிய பிரச்சனைகள் எழும் என்று எச்சரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில தமிழ் அரசியல்வாதிகளின் செயல்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழி வகுக்குமெனத் தெரிவித்திருக்கும் கூற்றை தமிழ் மக்களுக்கான பயமுறுத்தலாகப் பார்க்காது, சிங்கள பௌத்த இனவெறியினரை தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்ளச் செய்யும் அழைப்பாகவே பார்க்க வேண்டும்.

இவை அனைத்துமே எதிர்பார்த்தவைதான்!

முள்ளிவாய்க்காலில் மே 18ம் திகதி தமிழ் மக்கள் நினைவேந்தல் அனுஸ்டித்த வேளையில், அடுத்து என்னவெல்லாம் நடைபெறும் என்று எதிர்பார்த்தோமோ அவையெல்லாம் அச்சொட்டாக அப்படியே நடைபெறுகின்றன.

எதிர்பார்க்கப்பட்டவைகளில் முக்கியமானவையாக இரண்டினைக் குறிப்பிடலாம்.

வடமாகாணசபைத் தலைவரை குறிவைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைச் சீண்டிவிடும் செயற்பாடுகள் சிலரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவது நன்கு தெரிகிறது.

சிங்கள பேரினவாத தரப்பிலிருந்து ஆவேசக் கண்டனங்களும் தமிழ் இனத்துவேச பரப்புரைகளும் வருமென்பது எதிர்பார்க்கப்பட்டதே.

ராஜபக்ச சகோதரர்களிடமிருந்தே காரசாரமான அறிக்கைகள் வருமென்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுபோல அப்படியே நடைபெறுகின்றது.

அதேசமயம் வேறு சில சில்லறைச் சம்பவங்களும் கால தேவையை ஒட்டி இடம்பெறுகின்றன.

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வாய் மூடி மௌனித்திருந்த விக்னேஸ்வரன், இன்று எதற்காக இதுபற்றி அதிகம் பேசுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அண்மையில் அமைச்சரான விஜேதாச ராஜபக்ச.

அடுத்து வரப்போகின்ற மாகாணசபைத் தேர்தலுக்கான முன்னுரையா என்ற பாணியில் இவரது கேள்வி அமைந்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை வடமாகாண சபையே பொறுப்பேற்று நடத்தியது என்பதையும், முதலமைச்சரே சுடரேற்றி சிறப்புரை நிகழ்த்தினார் என்பதையும் அமைச்சர் விஜேதாச அறியவில்லைப் போலும்.

வடக்கில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றவேளையில், அங்கு உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனின் அழைப்பில் அமைச்சர் விஜேதாச யாழ்ப்பாணம் சென்றிருந்தமையால், சுமந்திரனை மகிழ்விப்பதற்காக முதலமைச்சர் பற்றி ஏதாவது தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அமைச்சர் விஜேதாசவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தாயகத் தமிழர்கள் பற்றி இன்று அடிக்கடி அதிகம் பேசுபவராக அமைச்சர் மனோ கணேசன் காணப்படுகிறார்.

விடுதலைப் புலிகளின் தலைமையையும் உரசிப் பார்க்க இவர் தவறுவதில்லை.

2002 யுத்த நிறுத்த காலத்தில் வன்னிக்கு விரைந்து தமிழரின் தேசியத் தலைவருடன் கைலாகு கொடுத்துப் படமெடுத்து, அதனைச் சகல ஊடகங்களிலும் பதிவிட்டு புளகாங்கிதம் கொண்ட இவர், இப்போது நரம்பில்லாத நாக்கை நான்கு பக்கமும் சுழற்றி தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நக்கல் அடிக்கிறார்.

அன்று ஓடி ஒளிந்தவர்கள் இன்று தீபமேற்றுகிறார்கள் என்று மனோ கணேசன் கூறியது, யுத்தத்தின்போது தமது உறவுகளை இழந்தவர்களையும் தொலைத்தவர்களையும் மனசு நோகடிக்கச் செய்யும் வார்த்தைப் பிரயோகம் என்பதை சிலவேளை அவரால் மாலை மயக்க வேளைகளில் உணர முடியாதிருக்கலாம்.

யுத்தத்தின்போது படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனரட்ன மீது, அவரது வம்சத்தினர் கற்களை வீச ஆரம்பித்துள்ளனர்.

யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன அமைச்சரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

“இராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்ததை ராஜித சேனரட்ன பார்த்தாரா” என்பதுதான் கமல் குணரட்னவின் கேள்வி.

அமைச்சர் ராஜித சேனரட்ன நேரில் பார்த்தாரா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால், இராணுவம் மக்களைக் கொலை செய்தது என்ற தனது கூற்றை இன்னமும் அவர் மீளப் பெறவில்லையென்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

போர்க்களத்தை கொலைக்களமாக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலியெடுத்த இராணுவ அதிகாரிகளில் முக்கியமானவரான கமல் குணரட்ன, தமது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்த்து அமைச்சரின் கேள்விக்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம்.

சிங்களத் தரப்பில் முக்கியமான இருவரின் கருத்துகளை இங்கு பார்ப்போம். ஒருவர் முன்னாள் ஜனாதிபதி. அடுத்தவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரத்துடிப்பவர்.

1977ம் ஆண்டுக் காலகட்டத்துக்கு நாட்டின் நிலைமை தற்போது சென்றுள்ளது என்று பயமுறுத்தும் கோதபாய ராஜபக்ச, புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகளை அனுமதிப்பது தமிழ் மக்களிடையே ஆயுதப் போராட்டம் ஒன்றை மீண்டும் உருவாக்கும் என்று சுட்டியுள்ளார்.

நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைக்கு இடம்கொடுத்து, பயங்கரவாதத்தை வளர்த்தெடுக்க நினைவுத்தூபிகளை எழுப்பவும் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என்று கோதபாய சிங்கள மக்களுக்கு இனவாதம் ஓதுகின்றார்.

வடக்கின் நினைவேந்தலால் பாரிய பிரச்சனைகள் எழும் என்று எச்சரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சில தமிழ் அரசியல்வாதிகளின் செயல்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழி வகுக்குமென்றும் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தக் கூற்றை தமிழ் மக்களுக்கான பயமுறுத்தலாகப் பார்க்காது, சிங்கள பௌத்த இனவெறியினரை தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்ளச் செய்யும் அழைப்பாகவே பார்க்க வேண்டும்.

மகிந்த, கோதபாய உட்பட சில சிங்கள அரசியல்வாதிகளும், முன்னாள் இராணுவ அதிகாரிகளும் மட்டுமே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கையிலெடுத்து இனவாதத்தை உசுப்பிவிட முன்வந்துள்ளனரே தவிர, சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அவ்வகையான உணர்வலைகள் எதுவும் இதுவரை எழவில்லை.

போரின்போது விடுதலைப் புலிகளுக்கு பயந்து பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர். நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததும் அந்த அரசியல்வாதிகள் கதாநாயகர்களாகி விட்டனர் என்ற மகிந்த ராஜபக்சவின் கூற்று இங்கே கவனம் பெறுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கோ அல்லது அதில் பங்கேற்றவர்களுக்கு இராணுவம் குளிர்பானம் வழங்கவோ அரசாங்கம் அனுமதி அளித்திருக்கக்கூடாது என்று தெற்கிலுள்ள வானொலி நிலையமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கோதபாய தெரிவித்ததன் அர்த்தம் என்ன?

உலகின் கண்களுக்கு தங்களை மனிதாபிமானிகள் என்று காட்ட இராணுவம் குளிர்பானம் வழங்கியதை கோதபாயவின் கண்கள் இனவெறியில் நோக்குவதையே இது காட்டுகிறது.

மறுபுறத்தில் வடமாகாணசபை முதலமைச்சருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையே குழப்பத்தை ஏற்படுத்த தமிழர் தரப்பில் சிலர் முயன்று வருகின்றனர்.

ஒருதரப்பினர் பல்கலைக்கழக மாணவர்மீது குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்.

இன்னொரு தரப்பினர் வடமாகாண முதலமைச்சரை இதே குற்றச்சாட்டில் இழுத்து வீழ்த்தப் பார்க்கின்றனர்.

நினைவேந்தல் நடைபெற்ற பகுதியில் பல்கலைக்கழக மாணவர் முதல்நாள் இரவு மது அருந்திக் கும்மாளமிட்டதாக திட்டமிட்ட பொய்ப்பரப்புரை நடைபெறுகிறது.

இதற்காக அங்குள்ள ஒரு வீட்டின் பின்பகுதியில் சிதறிக் கிடந்த மதுப்போத்தல்களின் படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இவைகளை விளக்கி பல்கலைக்கழக மாணவர் வெளியிட்ட அறிக்கையை திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கின்றனர்.

உணர்வுபூர்வமாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் இடம்பெற்ற நினைவேந்தல், அடுத்த தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் சிலருக்கு வயிற்றுளைவை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரையும் பல்கலைக்கழக மாணவர்களையும் நல்லுறவில் தொடரவிடாது பார்த்துக் கொள்வதே இவர்களின் இலக்காகவுள்ளது.

இந்தத் தீயசக்திகளையிட்டு ஒவ்வொருவரும் விழிப்போடிருக்க வேண்டும்.

தெற்கில் ஆட்சிகளும் காட்சிகளும் மாறினாலும், முள்ளிவாய்க்காலில் ஒளிர ஆரம்பித்திருக்கும் நினைவேந்தல் சுடரை அணையவிடாது பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரதும் தார்மிகக் கடமை.

No comments