அறிவிக்கப்படாத ஓர் அவசரநிலை தமிழகத்தில் திணிப்பு! வேல்முருகன் கைது!

அறிவிக்கப்படாத ஓர் அவசரநிலை தமிழகத்தில் திணிப்பு! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், படுகாயமுற்றோர் விவரம் மறைப்பு!

தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திக் கைது!

எந்தக் காரணமும் சொல்லாமல் நேற்று பிற்பகல் 3 மணி முதல் அங்கேயே சிறை வைத்து இன்று அதிகாலை 3 மணிக்கே "கைது" என்று சொல்லி திருக்கோவிலூர் கொண்டுவந்து நீதிமன்றக் காவலில் வைப்பு!

பழனிசாமி அரசின் திட்டமிட்டுப் பழிவாங்கும் இந்த அடாவடியை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுவிக்க வலியுறுத்துகிறது!

நாசகார தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி நடந்த 100ஆவது நாள் போராட்டத்தில் காவல்துறை சுட்டதில் இதுவரை 14 இறந்ததாகத் தெரியவந்தது.
65க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரியவந்தது.

துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் படுகாயமுற்று மருத்துவமனையில் இருப்பவர்களைப் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்றார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

அவரை அங்கு செல்லவிடாமல் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி ஒரு மண்டபத்தில் கொண்டுபோய் சிறை வைத்தது காவல்துறை.

எந்தக் காரணமும் சொல்லாமல் நேற்று 3 மணிக்கு வேண்டுமென்றே இந்த அடாவடியில் இறங்கிய காவல்துறை இன்று அதிகாலை 3 மணிக்குத்தான் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தது.
அப்படிக் கைது செய்த அவரை அங்கிருந்து உளுந்தூர்பேட்டைக்குக் கொண்டுவந்து பின் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதாக கூறி பின்னர் திருக்கோவிலூருக்குக் கொண்டுசென்று அலைக்கழித்தது காவல்துறை. 

திருக்கோவிலூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைக்கப்பட்டார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்.முதலில் கடலூர் சிறைச் சாலை பின்னர் வேலூர் சிறைச் சாலை என்றனர் அதன் பின்னர் சென்னை புழல் சிறைச்சாலைக்கு அழைத்து செல்வதாக காவல் துறையினர் அறிவித்தனர். இவ்வாறு நேற்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டது முதல் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்.

துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்கு காரணமாக காவல்துறை உயரதிகாரி, மாவட்ட ஆட்சி தலைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து பதவியை பறிக்க வேண்டும்.

இதற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

மக்களை பாதுகாப்பதற்கு பதிலா கொன்று குவித்த காவல்துறை குவிப்பை தூத்துக்குடியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட 
வேண்டும்.

கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் இன்னும் காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் இளைஞர்கள் உடனே விடுவிக்கப்பட வேண்டும்.

துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உண்மை எண்ணிக்கை வெளியிடப்பட வேண்டும் 

என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு சொட்டு நீர் கூட அறுந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வந்த அவரை தமிழக அரசும் காவல்துறையும் அலைக்கழித்து வருகின்றனர்.

நீதிமன்றக் காவலில் வைப்பதற்காக, ஒன்றரை மாதத்திற்கு முன் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டம் சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையை எதிர்த்த பொதுமக்களின் போராட்டமாகும்; தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற அந்தப் போராட்ட்த்தில் சுங்கச்சாவடி தாக்கப்பட்டதாக பொய்வழக்கு புனைந்துள்ளனர்.

அந்தப் பொய்வழக்கை மேலும் பொய்களைச் சேர்த்துப் புதுப்பித்து அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரைத் தொடர்புபடுத்தி இப்போது நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தடையில்லை. 

ஆனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு மட்டும் அனுமதி மறுப்பதற்குக் காரணமென்ன?

இது அநியாயம், அக்கிரமம் மட்டுமல்ல; பழிவாங்கும் செயல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் 14 பேர் மட்டுமே அல்ல; படுகாயமுற்று மருத்துவமனையில் இருக்கும் மேலும் 14 பேரின் நிலை கவலைக்கிடம் என்பதாக மாவட்ட ஆட்சியரிடமிருந்தே தகவல் வெளியாகிறது.

அப்படிப் பார்க்கும்போது, பலியானோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என்று அச்சமேற்படுகிறது.

பலியானோர் பற்றிய விவரம் சரியாக அறிவிக்கப்படாத ஒரு குழப்ப நிலை நீடிப்பதையே இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

மேலும், தூத்துக்குடியில் வீடு வீடாகச் சென்று இளைஞர்களைப் பிடித்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்வதும் தொடர்கிறது.

தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அத்தனை பேரும் கண்டித்தும் தூத்துக்குடியிலிருந்து காவல்படையை திரும்பப்பெறாமல் அங்கேயே முகமிடப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்கிற உண்மை நிலையை தமிழக அரசும்கூட தெளிவுபடுத்தத் தயாரில்லை. காரணம், அவர்களையும் மீறி காவல்துறை மோடி அரசின் கட்டளைக்கிணங்கவே செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே ஏற்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஓர் அவசர நிலை திணிக்கப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுவதாயிருக்கிறது.

இறந்தவர்களைப் பற்றி துக்கம் விசாரிக்கவும் மருத்துவமனையில் இருப்பவர்களைப் பார்க்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருக்குத் தடை என்பது திட்டமிட்டு அவரது செயல்பாட்டைத் தடுக்கப்பார்க்கும் சர்வாதிகார, பாசிசப் போக்கே தவிர வேறல்ல.

இப்படி அராஜக அடக்குமுறைகள் மூலம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயல்பாட்டைத் தடுத்துவிட முடியாது.

தூத்துக்குடிக்குச் செல்லவிடாமல் சட்டவிரோதமாகத் தடுத்துவிட்டிருக்கலாம். அதேபோல் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்குமான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பணியைத் தடை செய்துவிட முடியாது.

வழக்குகள், கைதுகள், சிறைகள் என்பவை தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குப் புதிதில்லை; எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆற்றிடத் தவறாது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனைக் கைது செய்து, திட்டமிட்டுப் பழிவாங்கும் இந்த அடாவடியை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

பொய்வழக்கு புனைந்து வேண்டுமென்றே தலைவர் வேல்முருகனைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கும் பழனிசாமி அரசு தன் சட்டவிரோதப் போக்கைக் கைவிட்டு  உடனடியாக அவரை விடுவிக்குமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

No comments