மீண்டும் ஆரம்ப புள்ளிக்குத் திரும்பும் தமிழரசின் விசித்திரமான போராட்டம் - பனங்காட்டான்

முப்பது வருட அறப்போர், முப்பது வருட ஆயுதப்போர், அடுத்த பத்தாண்டு கால அரசியல் ராஜதந்திர நகர்வு என்பவற்றுக்குப் பின், இன்று போய் நாளை வா என்று கூறும் சிங்கள அரசின் பின்னால் நின்றவாறு மீண்டும் எழுபதாண்டுக்கு முன்னைய ஆரம்பப் புள்ளிக்கு மக்களை தமிழரசுக் கட்சி அழைப்பது விநோதமான அரசியல் பம்மாத்து.
உலக நடப்புகள் என்பது எப்போதும் மாறிக்கொண்டேயிருப்பது.

அதனாற்தான் மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பது உலகப் புகழ்பெற்ற வாசகமாக நின்று நிலைக்கிறது.

இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் மிக நெருக்கடியான மாற்றத்துக்குரிய காலமாக நிகழ்காலம் காணப்படுகிறது.

தெற்கிலும் வடக்கிலும் நடைபெறுபவற்றுக்குள் பெரிதளவில் வித்தியாசமில்லை.

2015ல் மைத்திரியின் சுதந்திரக் கட்சியும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சியின் தேனிலவு மூன்றாண்டுக்குள் முடிந்துவிட்டது. இப்போது கசப்புக் காலம் நடைபெறுகிறது. இனி, பிரிவுக்காலம் எப்போது என்பதையே உள்ளும் புறமும் இருப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

இடதுசாரிகளுடனும், தேசிய சுதந்திர முன்னணியுடனும் சுதந்திரக் கட்சி ஏற்படுத்திய கூட்டு ஐக்கிய முன்னணி தேர்தல் காலக்கூட்டாகவன்றி, மகிந்த ஆட்சியின்போது அரசமைப்பிலும் தொடர்ந்தது.

2015 பொதுத்தேர்தலுக்குப்பின்னர் சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் மைத்திரி தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தனர்.

இதன் இன்னொரு பகுதியினர் இடதுசாரிகளுடனும் செஞ்சட்டைக்காரர்களுடனும் சேர்ந்து மகிந்த தலைமையில் பொதுஜன முன்னணியெனத் தனியாக இயங்க ஆரம்பித்தனர்.

பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ராட்சித் தேர்தல் முடிவுகள் இவர்களுக்குள் மேலும் ஆழமான சிக்கல்களை உருவாக்கியது.

இப்போது சுதந்திரக் கட்சிக்குள் நான்கு பிரிவுகள். மைத்திரி தலைமையில் ஒன்று. மகிந்த தலைமையில் இன்னொன்று. ரணில் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்ததால் அரசிலிருந்து வெளியேறி தனியாக இயங்கும் 16 பேர் குழு மற்றொன்று. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருபகுதியை இணைத்து புதிய ஆட்சியை ஏற்படுத்த முனையும் புதிய குழு நான்காவது.

மாற்றமடைந்து வரும் அரசியல் நிலைவரம் ஐக்கிய தேசிய கட்சி தனியாக ஆட்சியமைக்கும் வாய்ப்புக்குக் கொண்டுபோகிறது.

ரணிலுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தியுள்ளது.

ஆனால், ஏற்கனவே முரண்பாடுகளுடன் பிளவுபட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியை இத்தீர்மானம் பலப்படுத்தியுள்ளது.

இது ரணிலின் தந்திரமான நரி மூளையின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

எவ்வளவுக்கெவ்வளவு சுதந்திரக் கட்சி பல கூறுகளாகப் பிளவுபட்டுச் செல்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகி வருவதை இவ்வருட இறுதியில் காணமுடியும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 19வது அரசியல் திருத்தம், பிரதமர் பதவியை வெறும் அலங்காரக் கதிரையாகவன்றி, நிலையான செயற்பாட்டு மையமாக மாற்றியது.

ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புகளுக்கேற்றவாறு பிரதமரை வெளியேற்றவோ மாற்றவோ முடியாத பூட்டு இங்குள்ளது.

2003ம் ஆண்டில் ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக குமாரதுங்க, அப்போது பிரதமராகவிருந்த ரணிலை பம்பரமாகச் சுழற்றியாட்டியதும், அவரது தலைமையிலான நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தியதும், ரணில் அன்று கற்றுக் கொண்ட பாடங்களும் பெற்றுக் கொண்ட அரசியல் படிப்பினைகளுமாகும்.

அதனால், ரணில் தற்போதைய அரசாட்சியில் மிகத் துல்லியமாக திட்டமிட்டு தம்மை நிலைப்படுத்தியுள்ளார்.

இவரது மூலஇலக்கு பிரதமர் பதவியன்று. அடுத்தாண்டு 2019 இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் நிச்சயம் போட்டியிடுவாரென்பதை இப்போதே உறுதியாகக் கூறலாம்.

சுதந்திரக் கட்சி சார்பில் மைத்திரியும், பொதுஜன முன்னணியில் கோதபாயவும் அத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ரணிலுக்கான வெற்றி வாய்ப்பே அதிகம்.

எனவே, சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி சின்னாபின்னமாக்கும் அரசியல் தந்திரத்தை ரணில் தொடர்ந்தும் மேற்கொள்வாரென்பதில் ஐயமில்லை.

மறுபுறத்தில், தமிழர் அரசியலும் தெற்குக்கு எந்தவிதத்திலும் மாறுபட்ட வகையில் செல்லவில்லை.

கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறியதோடு முதலாவது வெடிப்பு ஆரம்பமானது.

கஜேந்திரகுமாருக்கு சரியான பாதையில் அரசியல் செய்யத் தெரியாமையால் கூட்டமைப்பை அவரது வெளியேற்றம் உடனடியாகப் பாதிக்கவில்லை.

உடுவில் தொகுதியின் தமிழரசுக் கட்சி பிரதிநிதியாக நீண்டகாலம் இயங்கிய காலஞ்சென்ற வி.தர்மலிங்கத்தின் மகனாக புளொட் அமைப்பின் சித்தார்த்தன் இருந்தமையால், தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக அவரைக் கூட்டமைப்பில் உள்வாங்கியது.

தந்தையின் வாக்கு வங்கி சித்தார்த்தனின் வெற்றிக்கு உதவிய போதிலும், மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவுத் தளம் குறைவாகவே இருக்கிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் வெளியேற்றம் எதிர்பார்த்தளவில் கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கடந்தகால ஏற்கமுடியாத செயற்பாடுகளும், பின்னர் ஆனந்தசங்கரியுடன் இணைந்து கொண்டமையும் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கைச் சரித்தது.

ஆனால், கடந்த வருடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பதவியிலிருந்து அகற்ற தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரன் மேற்கொண்ட முன்னெடுப்பு, கூட்டமைப்புக்குள் பாரிய விரிசலை ஏற்படுத்தியதோடு மக்கள் மத்தியிலும் அதன் செல்வாக்கை இறங்குமுகத்துக்குக் கொண்டு சென்றது.

நல்லாட்சி அரசின் மீதான நம்பகத்தன்மையை விக்னேஸ்வரன் எப்போதும் கேள்விக்குரியதாகவே விமர்சித்து வந்தார்.

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றது இனஅழிப்பு என்று தீர்மானம் நிறைவேற்றி, நல்லாட்சியுடன் சேர்ந்தியங்கும் கூட்டமைப்பின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.

இவைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத சுமந்திரன் அணி அவர்மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி, அவரை மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்ப எடுத்த முயற்சி பிசுபிசுத்துப் போனது.

யாழ்ப்பாணத் தமிழரின் உடலில் ஓடுவது சிங்கள இரத்தம் என்று அடிக்கடி கூறி தமது முதுகைத் தாமே சொறிந்து இன்பம் காணும் மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேயும், சுமந்திரன் அணியுடன் திரைக்குப் பின்னால் நின்று முதலமைச்சருக்குக் குழி தோண்டியவர்.

ஆனால், முதலமைச்சருக்கு மக்கள் வழங்கிய பகிரங்க ஆதரவு சுமந்திரன் முயற்சியை சுக்குநூறாக்கியது.

இதன் பிரதிபலிப்பே பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு எதிர்கொண்ட எதிர்பாராத தோல்வி.

தென்னிலங்கை அரசியல் குழப்பம், நிலையற்ற ஆட்சி, கூட்டுக்குள் ஏற்பட்ட பிணக்கு என்பவை புதிய அரசியலமைப்பு என்ற நம்பிக்கையை இல்லாமற் செய்துவிட்டது.

அடுத்த 24 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என மூன்று முக்கிய தேர்தல்களை சந்திக்கவிருப்பதை உணர்ந்து கொண்ட கூட்டமைப்பு தனது வழமையான பல்லவியை மாற்றத் தொடங்கியுள்ளது.

புதிய அணியொன்றின் தலைமையில் அடுத்த தேர்தலைச் சந்திக்கவிருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் வீசிய அணுகுண்டு, கூட்டமைப்பினரின் இந்தப் பல்லவி மாற்றத்துக்கு இன்னொரு முக்கிய காரணம்.

இதன் வெளிப்பாடே, அண்மைய நாட்களில் சம்பந்தனும் சுமந்திரனும் தங்கள் கூட்டாளிகளான நல்லாட்சிக்கு விடுக்க ஆரம்பித்திருக்கும் எச்சரிக்கைகள்.

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்தும் பாராமுகமாக இருக்குமாயின், வடக்கு கிழக்கில் அரச நிர்வாகத்தை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படுமென சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தமிழ் மக்கள் தமக்குரிய வழியை வகுத்துக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கக் காலத்தில் எதுவுமே கிடைக்காது என்று தெரிந்துள்ள நிலையில் சம்பந்தனும் சுமந்திரனும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மக்கள் தலையில் எண்ணெய் தடவ ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திலுள்ள 13வது திருத்தம் அப்போதைய காலத்துக்குத் தேவைப்பட்டது, ஆனால் இப்போது அது பொருத்தமற்றது என்று இந்தியா ஆறு மாதங்களுக்கு முன்னர் தெரிவித்ததை வசதிகருதி மறந்தவராக சம்பந்தன், இந்தியாவின் கடமையை எதிர்பார்த்து நிற்பதாகக் கூறுவது யாரை ஏமாற்றும் முயற்சி?

முப்பது வருட அறப்போர், முப்பது வருட ஆயுதப்போர், அடுத்த பத்தாண்டு கால அரசியல் ராஜதந்திர நகர்வு என்பவற்றுக்குப் பின், இன்று போய் நாளை வா என்று கூறும் சிங்கள அரசின் பின்னால் நின்றவாறு மீண்டும் எழுபதாண்டுக்கு முன்னைய ஆரம்பப் புள்ளிக்கு மக்களை தமிழரசுக் கட்சி அழைப்பது விநோதமான அரசியல் பம்மாத்து.

1961 சத்தியாக்கிரக காலத்துக்கும், 2018ம் ஆண்டுக் காலத்துக்குமிடையிலான மாற்றங்களை தமிழரசுக் கட்சி ஒரு தடவை கண்களை மூடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

No comments