
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள 10 நிபந்தனைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதில் இன்று வழங்கப்படும். அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நேரில் முன்வைத்தனர்.இந்தக் கோரிக்கைகளுக்கு பிரதமர் ரணில் எழுத்துமூலம் பதில் வழங்கவேண்டும் என்றும் கோரினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றக் குழுவினர், பிரதமர் ரணிலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தினர். அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் உடனடி மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.
கூட்டமைப்பினரின் கோரிக்கைளைப் பார்வையிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவற்றை நிறைவேற்றலாம் என்று வாய்மூலம் பதிலளித்துள்ளார். அவற்றை எழுத்தில் வழங்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு தான் நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட வாக்குறுதிகளை நாடாளுமன்றத்தில் தான் உரையாற்றும்போது வெளிப்படையாகவே குறிப்பிட வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் வலியுறுத்தினார்.
ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள பிரதமர் மறுத்துவிட்டார். தான் அவ்வாறு செய்தால் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரினதும் கோபத்துக்கு ஆளாகநேரிடும் என்று அவர் அச்சம் வெளியிட்டார்.கூட்டமைப்பினரின் கோரிக்கைக்கான பதிலை இன்று வழங்குவதாக ரணில் கூறியுள்ளார்.
Post a Comment