பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், கூட்டு அரசாங்கம் இன்று இரவு 9.30 மணியுடன் முடிவுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த ஒரு வாரத்துக்குள்ளேயே கூட்டு அரசுக்குள் உச்சக்கட்ட முரண்பாடு எழுந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர். இந்த விவகாரத்தில் மேற்குலக இராஜதந்திரிகள் தலையிட்டதை தொடர்ந்து நிலமை சுமுகமானது. அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகள் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் இடம்பெறவில்லை.
இவற்றுக்கிடையே மகிந்த அணியால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ரணில் விலகவேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் குரல் எழுப்பத் தொடங்கினர். இந்த நிலையில் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ரணில் வெற்றி பெற்றாலும், கூட்டு அரசு நீடிக்காது என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகாவிடின், கூட்டு அரசிலிருந்து இன்று இரவு 9.30 மணிக்கு சுதந்திரக் கட்சி வெளியேறும் என்று அந்தக் கட்சி முன்னரே அறிவித்திருந்தது. பிரதமர் ரணிலுடனான நேற்றைய சந்திப்பும் திருப்தியளிக்காத நிலையில், சுதந்திரக் கட்சி கூட்டு அரசிலிருந்து வெளியேறும் முடிவில் உறுதியாக உள்ளது என்று தெரியவருகின்றது.
Post a Comment