ரணில் சந்தித்த அக்கினிப் பிரவேசம்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதன் மூலம், இன்றைய கூட்டரசாங்கம் எதிர்நோக்கிய பாரிய தடைக்கல்லொன்று அகற்றப்பட்டிருக்கின்றது. அதேசமயம், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனைய தோழமைக் கட்சிகளும் ஒன்றிணைந்து அமைத்துக் கொண்டுள்ள கூட்டரசாங்கமானது தனது பயணத்தை நம்பிக்கையுடன் தொடருவதற்கான உத்தரவாதமும் மீண்டும் கிடைத்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பைச் சேர்ந்த கூட்டு எதிரணியினரைப் பொறுத்தவரையில், 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அடுத்தடுத்த தோல்விகளுள் இதுவும் ஒன்று என்றே கூற வேண்டியுள்ளது. 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த தோல்வியின் பின்னர், அதே வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றுவதன் மூலமாவது அதிகாரத்தைப் பெற்றெடுக்கலாமென மஹிந்த அணியினர் மேற்கொண்ட முயற்சியும் பயனளிக்கவில்லை. 2015 ஓகஸ்ட் மாத பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டதன் மூலம், நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்வதற்கான அங்கீகாரம் மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்ற அமர்வுகளின் போது பல தடவைகளில் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. வரவு செலவுத் திட்டங்களையும், அரசியலமைப்புத் திருத்தங்களையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புகள் ஒவ்வொன்றின் போதும் மஹிந்த தரப்பு அணியினரின் எதிர்பார்ப்பு நிறைவேறவேயில்லை. அரசாங்கம் முன்வைக்கின்ற பிரேரணைகளைத் தோற்கடிப்பதன் வாயிலாக, பாராளுமன்றத்தில் அரசாங்கம் பலமிழந்து விட்டதென நிரூபிக்க வேண்டுமென கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பெருமுயற்சி மேற்கொண்டு வருகின்றது மஹிந்த தரப்பு அணி. எனினும் அரசின் பலம் குன்றி விட்டதாகவோ அல்லது மஹிந்த தரப்பு அணியின் பலம் மேலோங்கி விட்டதாகவோ நிரூபிக்கின்ற வகையில் பாராளுமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களாக எதுவுமே நடந்தேறவில்லை. கூட்டு எதிரணியினரின் அத்தனை தடைக்கற்களையும் இலகுவாகத் தாண்டியபடியே பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது இன்றைய கூட்டரசாங்கம். எதிரணியின் மற்றொரு முயற்சிக்கான தோல்வி நேற்றுக் கிடைத்திருக்கின்றது. ஐ.தே.க – சு.க நல்லிணக்கப் பயணத்திற்கு இனிமேல் பாரிய தடைகள் எதுவுமேயில்லை. அரசியல் விவகாரங்களில் அனைத்தையும் தீர்மானிக்கின்ற இடம் பாராளுமன்றம் ஆகும். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதென்ற திட்டம் இன்று நேற்றுத் தோன்றியதல்ல... அரசியல் களத்தில் இதுபற்றிய பேச்சுகள் கடந்த ஒரு வருட காலமாகவே அடிபட்டுக் கொண்டிருந்தன. கடந்த ஒரு வருடமாக பெருமுயற்சி மேற்கொண்ட போதிலும், பிரதமர் ரணிலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி ஒன்றுசேர்க்க முடியாததால், கூட்டு எதிரணியானது தனது அரசியல் திராணியற்ற நிலைமையை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது எனக் கூறுவதில் தவறில்லை. அதேசமயம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியதிகாரத்தில் ஸ்திரமான நிலையொன்றை பதித்துக் கொண்டிருக்கிறார் என்றும் இவ்விடத்தில் கூற முடியும். ரணிலுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையானது இப்போது அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்ற தீர்மானமாக நிறைவேறியிருக்கின்றது என்பதே உண்மை! பிரதமர் ரணில் நேற்று ஈட்டியிருக்கின்ற வெற்றியானது அவருக்கு மாத்திரமோ அல்லது ஐ.தே.கவுக்கோ மாத்திரம் கிடைத்துள்ள வெற்றியென்று மாத்திரம் கூறி விட முடியாதுள்ளது. முன்னைய சர்வாதிகாரத்தனம் நிறைந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏனைய தோழமைக் கட்சிகளுக்கும் கூட இதன் மூலம் வெற்றி கிடைத்திருக்கின்றது. சர்வாதிகாரத்துக்கு மீண்டும் மகுடம் சூட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்குக் கிடைத்த தோல்வியென்றே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கிடைத்த தோல்வியைக் கருத வேண்டியுள்ளது. ரணில் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டமையானது பல்வேறு அரசியல் யதார்த்தங்களை எமக்கெல்லாம் உணர்த்துகின்றது. அவைபற்றியெல்லாம் இங்கு ஆராய வேண்டியது முதலில் அவசியம். அன்றைய அராஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 2015 ஜனவரித் தேர்தலில் கைகோர்த்துக் கொண்டுள்ள அரசியல் கடசிகளுக்கிடையேயான புரிந்துணர்வும் நல்லிணக்கமும் இன்னமும் குலைந்து போய்விடவில்லையென்பது இப்போது உணரப்பட்டிருக்கின்றது. இவ்வாறு கைகோர்த்துக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள் 2020 தேர்தல் வரை தங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்குமென்பதும் உறுதியாகி விட்டது. இந்த நல்லிணக்கமானது 2020 தேர்தலுக்குப் பின்னரும் தொடருவதற்கு வாயப்பிருக்கின்றது. மற்றையது தலைமைத்துவம் மீதான நம்பிக்கை! ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கடந்த காலத்தில் எத்தனையோ உள் முரண்பாடுகள் பல தடவைகளில் வெளிப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. இக்கட்சி பல கூறுகளாக சிதைந்து போவதற்கான நெருக்கடிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தோன்றியிருக்கின்றன. கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் ஏற்பட்டதுண்டு. முன்னைய ஆட்சியின் போது ஐ.தே.க எம்.பிக்களில் பலருக்கு மஹிந்த ராஜபக்ஷ அமைச்சுப் பதவிகளை வழங்கி அவர்களை அரசாங்கத்துக்குள் ஈர்த்துக் கொண்டதெல்லாம் ஐ.தே.கவுக்கு பேராபத்து நிறைந்த சந்தர்ப்பங்கள்! ஐ. தே. க. இனிமேல் வீழ்ச்சியிலிருந்து எழுந்திருக்கவே வாய்ப்பில்லை என்றபடிதான் அன்றைய அரசியல் நிலைவரம் இருந்தது. ஆனால் அதலபாதாள வீழ்ச்சியிலிருந்து ஐ.தே.க மீண்டெழுந்து வந்தது மட்டுமே இங்கு புதுமையல்ல... ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இன்றுவரை நிலைத்திருப்பது மாத்திரமன்றி, அவரது தலைமைத்துவத்தை ஐ.தே.க எம்.பிக்கள் மீண்டுமொரு தடவை இப்போது உத்தரவாதப்படுத்தியிருப்பதும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டிய விடயங்களாகும். பாரிய தடைக்கல்லை கூட்டரசாங்கம் தாண்டியிருக்கின்றது. கூட்டு எதிரணி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் நோக்கம் அரசியல் சார்ந்தது என்பது சந்தேகத்துக்குரியதல்ல. நம்பிக்கையில்லாப் பிரேரணையை அலட்சியம் செய்தபடியே இலகுவாக அதனைத் தாண்டியிருக்கிறார் ரணில். மறுபுறத்தில் நோக்குகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை, நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம் மிகுந்த தர்மசங்கடம் நிறைந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் பத்து வருட கால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்துக் கொண்டவர் ரணில். இத்தகைய நிலைமையில் ரணில் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தபடி எதிர்கொள்வதில் ஜனாதிபதி சந்தித்த சங்கடங்கள் அதிகம்! நாட்டில் ஜனநாயக சூழலைத் தோற்றுவிப்பதற்காகத் தோள் கொடுத்த ரணில் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மைத்திரிக்கு உவப்பானதொன்றாக இருந்திருக்க முடியாது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது நல்லாட்சியைக் குலைப்பதற்கான ஆபத்தாக அமைந்து விடக் கூடாதென்ற கவலையையும் மைத்திரி கொண்டிருந்தது உண்மை! அதேசமயம் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை எதிர்க்கின்ற சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் இருந்ததனால் மைத்திரிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம் இன்னும் அதிகமாகும். எனினும் அத்தனை நெருக்கடிகளில் இருந்தும் மீண்டு வந்துள்ளது அரசாங்கம். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கூட்டு எதிரணியினரின் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்குக் கைகொடுத்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளின் தீர்மானம் மிகவும் பக்குவம் நிறைந்ததென்றே கூற வேண்டியுள்ளது. தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் பிரதமர் ரணில் மீது நம்பிக்கை வைத்துள்ளன என்று கூறுவதற்கு அப்பால் மற்றொன்றையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. ராஜபக்ஷக்களின் தலைமைத்துவம் நாட்டில் மீண்டும் வந்துவிடக் கூடாதென்பதில் சிறுபான்மைக் கட்சிகள் திடமான நம்பிக்கையை இன்னமும் கொண்டுள்ளன என்பது பாராளுமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது. ராஜபக்ஷக்களின் பத்துவருட ஆட்சிக் காலத்தின் போது சிறுபான்மையின மக்கள் நடத்தப்பட்ட விதம் எத்தகையதென்பதை தமிழ், முஸ்லிம் கட்சிகள் இலகுவில் மறந்து விடவில்லை. அதேவேளை, சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாயின் இன்றைய கூட்டரசாங்கத்துக்கு எதுவித இடையூறும் ஏற்பட்டு விடலாகாது என்பதிலும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் உறுதிப்பாட்டுடன் உள்ளனவென்பது நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் மூலம் உறுதியாகி விட்டது. பிரதமர் ரணிலைப் பொறுத்தவரை தற்போது நடந்திருப்பது அக்கினிப் பிரவேசம்! அரசியல் காரணங்களுக்காக சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும், தன் மீதான நம்பிக்கையை பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார் ரணில். அக்கினிப் பிரவேசம் மூலம் தன் மீதான தூய்மையை நிரூபித்திருக்கிறார் அவர். அதேவேளை, புதிய மாற்றங்களுக்கான சிந்தனைகளுடன் ஆட்சியை முன்னெடுக்க வேண்டிய அனுபவத்தையும் நம்பிக்கையில்லாப் பிரேரணை அவருக்குக் கொடுத்திருக்கிறது.

No comments