போராட்டம் காரணமாக, மெரினா கடற்கரையில் இன்று பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் காரணமாக, சென்னை மெரினா கடற்கரையில் இன்று பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 500-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை உள் சாலையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மெரீனா கடற்கரைக்கு வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெரினா கடற்கரையில் ஏராளமானோர் நடைபயிற்சிக்கு வருவது வழக்கம். இன்று காலை மெரினா கடற்கரைக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கடற்கரையை ஒட்டிய பிளாட்பாரத்திலேயே அவர்கள் நடைபயிற்சியை மேற்கொண்டனர். இதனிடையே, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பலத்த பாதுகாப்பையும் மீறி போராட்டம் நடைபெற்றதை அறிந்த போலீசார், அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

No comments