விமான நிலையம் முற்றுகை... விளம்பரப் பதாகை மீது ஏறி த.வா.க போராட்டத்தால் பதற்றம்!


காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். பயணிகள் உள்நாட்டு முனயம் செல்லும் பகுதியில் உள்ள விளம்பரப் பதாகை மீது ஏறி நின்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் சென்னை விமான நிலையம் வந்தடைய உள்ள நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்லும் 5வது கேட் பகுதி பலத்த பாதுகாப்புடன் இருக்கிறது.எனினும் உள்நாட்டு முனையம் பகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். இதே போன்று விமான நிலைய கார் நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரமான விளம்பரப் பதாகை மீது ஏறி நின்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆபத்தான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.கையில் கருப்புக்கொடி ஏந்தியும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடியை பிடித்துக் கொண்டும் மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் எதிராக அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். பாதுகாப்புகளையும் மீறி உயரமான இடத்தில் ஏறி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. போராட்டக்காரர்களை கீழே இறங்கி வருமாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

No comments