மோடி விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமானநிலையம் அருகே கறுப்பு பலூன்கள் பறக்கவிட்டு போராட்டம்


ராணுவக் கண்காட்சியை திறந்து வைக்க சென்னை வரும் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடி மற்றும் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற இருக்கும் ராணுவக் கண்காட்சியைத் துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக சென்னையின் முக்கிய இடங்களில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
காலை 8.45 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பிய மோடி இன்னும் சற்று நேரத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைய இருக்கிறார். விமான நிலையம் அருகே உள்ள பரங்கிமலையில் இருந்து கறுப்பு பலூன்களை பறக்கவிடும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். வேல்முருகன் தலைமையிலான இப்போராட்டத்தின்போது கறுப்பு பலன்கள் பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments