இந்தியா செல்கிறார் விக்னேஸ்வரன்! - புதுடெல்லியுடன் பேசுவார்?


வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விரைவில் இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று முதலமைச்சர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன. தனிப்பட்ட முறையில், ஆன்மீக பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகின்றது. தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் முதலமைச்சர் புதுடில்லிக்கும் செல்வார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்து, மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளார். எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிடையவுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக, விக்னேஸ்வரன் நியமிக்கப்படமாட்டார் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தும் உள்ளார். அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியுடன் அல்லது சுரேஸ் பிரேமச் சந்திரன் தலைமையிலான அணியுடன் இணைந்து செயற்படுவது குறித்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதுவரை எதுவும் கூறவில்லை. ஆகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன், தற்போது எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், தனிப்பட்ட முறையில், ஆன்மீக விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இந்தியாவுக்குச் செல்லும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அங்கு இந்திய உயர்மட்ட அதிகாரிகள் சிலரை சந்திப்பாரா இல்லையா என்பது குறித்து எதுவும் தெரியாதென, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments