கரவெட்டியை கைக்கு தாரை வார்க்க கூட்டமைப்பு,ஈபிடிபி தயார்!


வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையெனப்படும் கரவெட்டி பிரதேசசபையை பெரும்பான்மையின கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாரை வார்க்க கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி முடிவு செய்துள்ள நிலையில் தமிழ் தரப்பு ஆட்சியமைக்க கைகொடுக்கப்போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

யாழிலுள்ள ஏனைய உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்க கூட்டமைப்பிற்கு சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவளிக்கும் அதே வேளை கரவெட்டிப்பிரதேசசபையினை விட்டுக்கொடுக்க கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி அங்கயன் இராமநாதனுடன் நடந்த பேச்சுக்களில் சம்மதித்துள்ளன.

இதன் பிரகாரம் தனது தந்தையாரான இராமநாதனை தவிசாளராக்க அங்கயன் திட்டமிட்டிருந்தார்.

கரவெட்டி பிரதேசசபையில் த.தே.கூட்டமைப்பு 8 ஆசனங்களையும், த.தே.ம. முன்னணி மற்றும் சுதந்திரக்கட்சி ஆகியன தலா 7 ஆசனங்களை பெற்றுள்ளன. ஈ.பி.டி.பி 3 ஆசனங்கள் உள்ளது.

வேலணை பிரதேசசபையில் ஈ.பி.டி.பிக்கு ஆதரவளித்தது சுதந்திரக்கட்சி. கரவெட்டில் தமக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற நிபந்தனையுடனேயே இந்த ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஈபிடிபி ஆதரவளிக்குமாவென ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க யாழ்.மாவட்ட அமைப்பாளர் ஜெகன் பின்னடித்திருந்தார்.

ஏதிர்வரும் செவ்வாய் கிழமை காலை முடிவை எதிர்பார்த்திருக்குமாறு ஆலோசனையினை அவர் ஊடகவியலாளர்களிற்கு வழங்கியுமிருந்தார்.

கரவெட்டி பிரதேசசபையை பெரும்பான்மையின கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாரை வார்க்க கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி முடிவு செய்துள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

No comments