அவுஸ்ரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் அகால மரணம்!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி கடந்த 15ம் திகதி அகால மரணம் அடைந்துள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும் அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சிட்னியில் ஓபன் என்ற புறநகரில் வசித்த லோகேஸ்வரன் துரைசாமியின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதிகாலை வேலை முடித்து வீடு திரும்பும் போது அவசரகால உதவி பெற அழைக்கும் தொலைபேசி எண்ணை அழைத்து பொலிஸாருடன் பேசியிருக்கிறார். அதன் பின்னர் குறுகிய நேரத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். பொலிஸாரின் தகவல்களின்படி அவர் மேற்கு சிட்னியின் ரயில் நிலையம் ஒன்றில் தமது உயிரை மாய்த்துக்கொண்டார் என்று தெரியவருகிறது.

இப்போது லோகேஸ்வரனின் உடலம் திடீர் மரண விசாரணை அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு தேடி அவுஸ்திரேலியா வந்த லோகேஸ்வரனின் வயதான பெற்றோரும் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் இலங்கையில் உள்ளனர். அவருக்கு அவுஸ்திரேலியாவில் உறவினர்களோ நெருங்கிய நண்பர்களோ இல்லை.

லோகேஸ்வரனின் இறுதிச் சடங்கை சைவ முறைப்படி எளிமையாக நடத்துமாறு குடும்பம் கோரியிருக்கிறது. ஒரு புதுவரவான லோகேஸ்வரன் வசம் சேமிப்போ எதுவிதமான காப்பீடுகளோ இருக்கவில்லை. அவரது இறுதிச்சடங்குக்காக லோகேஸ்வரனின் நலன்விரும்பிகள் பணம் சேகரித்து வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments